திருச்சியில் சுங்கச்சாவடி கண்ணாடிகள், கேமராக்கள், தடுப்பு கட்டைகளை உடைத்தால் பரபரப்பு.
நாடு முழுவதும் மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்காக கட்டணங்களை வசூலித்து வருகிறது. இதில் வருடத்திற்கு இரண்டு முறை சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிக்கப்படுவதுடன் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்கிறது.
இதனால் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், காலாவதியான சுங்கச்சாவடிகளை உடனடியாக இழுத்து மூட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகளும், அரசியல் பிரதிநிதிகளும் கோரிக்கையாக வைத்து வருவதுடன் அடிக்கடி போராட்டங்களையும் அறிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் திருச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட 7 இடங்களில் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டங்களை இன்று நடத்தினர். அதில் ஒரு பகுதியாக திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் அருகே துவாக்குடி பகுதியில் உள்ள சுங்கச்சாவடியை மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளரும், மணப்பாறை எம்எல்ஏ-னமான அப்துல் சமது தலைமையில் மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அப்துல் சமது கூறியதாவது....... நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்க சாவடிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கி வருகிறது. தமிழகத்தில் 67 சுங்கச்சாவடிகள் உள்ளது. மேலும் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக விழுப்புரம் உள்ளிட்ட பகுதியில் 3 புதிய சுங்கச்சாவடிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 70 சுங்கச்சாவடிகள் உள்ளது.
இந்த சுங்கச்சாவடி மூலம் நாள் ஒன்றுக்கு சுங்க கட்டணமாக 50 கோடி வசூல் ஆகிறது. இது ஆண்டிற்கு சுங்க கட்டணமாக தமிழகத்தின் சார்பில் 18 ஆயிரம் கோடி மக்கள் வரியாக செலுத்துகிறோம். கேரள மாநிலத்தில் 5 சுங்கச்சாவடிகள் மட்டுமே உள்ளது. தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளை கணக்கு பார்த்தால் 9 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும்.
இது சம்பந்தமாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹிருல்லா சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய பொழுது அதற்கு பதில் அளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவ வேலு தமிழகத்தில் 30 சுங்கச்சாவடிகள் காலாவதி ஆகிவிட்டது என்றும், அவற்றை மூடுவதற்கு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் இதுவரை ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறினார்.
மேலும் ஒரு வருடத்திற்கு ஏப்ரல் மற்றும் செப்டம்பர் என இரண்டு முறை 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை சுங்க கட்டணங்களை உயர்த்துவதாகவும், தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை விபத்துகளில் சிக்குபவர்களை மீட்பதற்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. மேலும் வாகனங்கள் இருசக்கர வாகனம் முதல் கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் வாங்கும் பொழுது சாலை வரியாக ஆண்டுக்கு 7 ஆயிரம் கோடி தமிழகத்திலிருந்து வரியாக செலுத்தப்படுவதாகவும்,
இப்படி இருக்கும் பொழுது இந்த சாவடிகள் எதற்கு அதனால் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படுவதாகவும் புதிதாக சுங்கச்சாவடிகள் தொடங்கக்கூடாது காலாவதியான 30 சுங்கசாவடிகளை அகற்ற வேண்டும், சுங்க கட்டணங்களை உயர்த்த கூடாது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி முதல் கட்டமாக இந்த முற்றுகை போராட்டம் தமிழக முழுவதும் 7 சுங்கச்சாவடிகளில் நடைபெறுகிறது.
அதில் திருச்சியில் துவாக்குடி சுங்கச்சாவடியில் போராட்டம் செய்கிறோம். இதற்கு அரசியல் செவி சாய்க்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டமாக தோழமைக் கட்சிகளுடன் பெரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் .
மாநில அரசின் கட்டுப்பாட்டை மீறிதான் இந்த சுங்கச்சாவடிகளை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது என்று செங்கல்பட்டு பரனூர் சங்கசாவடி காலாவதியாகி 10 ஆண்டுகளுக்கு மேலாகி ஒன்றிய அரசின் அமைச்சர்களின் உறவினர்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்ய அனுமதி அளித்துள்ளார்கள். அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்றார். இந்த போராட்டத்தில் திருச்சி - தஞ்சை, நாகை, அரியலூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 400 பேர் கலந்து கொண்டனர். முன்னதாக போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வேனில் வந்தவர்களுக்கு சுங்க கட்டணம் வசூலித்து தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சியினர் சாவடியை அடித்து நொறுக்க போவதாக கூறியதால் போலீசார் சமரசம் செய்து அந்த சுங்க கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொடுத்தனர்.
இந்த நிலையில் சுங்கச்சாவடி முன்பு அப்துல் சமது தலைமையில் போராட்டம் நடைபெற்ற நிலையில், மனித நேய மக்கள் கட்சியினர் தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி வரும் பகுதியில் உள்ள சுங்கசாவடி கண்ணாடி, கேமரா, வாகன தடுப்பு கட்டைகள் உடைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்வது தொடர்பாக ஆலோசனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் சங்க சாவடி முற்றுகை போராட்டத்தால் மனிதநேய மக்கள் கட்சியினர் ஈடுபட்டுள்ளதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision