திருச்சியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 3 கடைகள் எரிந்து சாம்பலாயின

திருச்சியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 3 கடைகள் எரிந்து சாம்பலாயின

திருச்சி ஒத்தக்கடை அருகே உள்ள பாரதிதாசன் சாலையில் பி.எஸ்.என்.எல் மண்டல அலுவலகம் உள்ளது. இதன் அருகே, லியோ ஆட்டோ ஆக்சசரீஸ் என்கின்ற பெயரில் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு புதிய உதிரி பாகங்கள் விற்பனை செய்யக்கூடிய கடை உள்ளது.

இதனை லியோ என்பவர் நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல தனது கடையை பூட்டி விட்டுச் சென்ற நிலையில், இன்று காலை 5.30 மணியளவில், கடையிலிருந்து தீ புகை வெளி வருவதை கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள், உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த திருச்சி கண்டோன்மென்ட் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே தீ மளமளவென பரவி அருகே உள்ள சந்தோஷி Car Care மற்றும் டபுள் ஸ்டைன் என்ற பேக்கரி ஆகிய இரு கடைக்கும் பரவியது. இதனால் இந்த மூன்று கடைகளிலும் ஏற்பட்டுள்ள
தீயை அணைக்கும் பணியில், திருச்சி மாவட்ட தீயணைப்பு அலுவலர் அனுசியா தலைமையிலான பதினைந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

மேலும் இந்த தீ விபத்தில் நான்கு சக்கர உதிரிபாக விற்பனை கடையில் உள்ள பல லட்சம் மதிப்பிலான உதிரி பாகங்கள் முழுவதும் தீயில் எரிந்து சாம்பலாயின. இதே போன்று அருகே உள்ள கார் நிறுவனம், பேக்கரி உள்ளிட்ட இரண்டு கடைகளிலும்  இருந்த பொருட்கள் எரிந்து பேக்கரியில் இருந்த சிலிண்டர்கள் தீயணைப்பு வீரர்கள் மூலம் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன.

இந்த தீ விபத்தின் காரணமாக அப்பகுதியில் புகை மண்டலமாக காட்சியளித்தது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தீயை போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதனையடுத்து நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் கார் உதிரி பாகம் விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவருகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF