இந்தநாள்... ஜெட்ஜ்மெண்ட் டே டீ ! ஜெட்ஜ்மெண்ட் டே !!
உடையறதும் ஒட்டுக்கிறதும் சகஜமா போச்சு மஹா ! என்ன தலைவரே எதைப்பத்தி பேசுறீங்க ? அதான் இப்ப அஞ்சு ரூபாய்கே ஃபெவிபிஸ்க் வந்துடுச்சே... உனக்கு எல்லாமே விளையாட்டா போச்சு மஹா நான் அதிமுக கதையை சொல்றேன். ஓஹோ இன்னைக்கு வெள்ளிக்கிழமை அதனால தைரிய லெட்சுமி கட்டை கையில எடுத்துட்டிங்க போல, நான் எடுக்கல மஹா நீதிமன்றம் எடுத்து தீர்ப்பு சொல்லப்போறாங்க, சரி சரி பத்தரை பன்னிரெண்டு ராகுகாலம் அதுக்கு முன்னாடி தீர்ப்பு வந்திடணும் அப்புறம் அடுத்த தர்மயுத்தத்திற்கு வேற தயாராகணும் இப்பவே ஓபிஎஸ் அணியில பேச ஆரம்பிச்சுட்டாங்க,
அப்படினா ஈபிஎஸ் அணிக்குத்தான் சாதகமா தீர்ப்பு வரும்கிறீங்களா தலைவரே அப்படித்தான் சொல்றாங்க மஹா, ஈபிஎஸ் குரூப்ல, வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும் அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்னு ஹம்மிங் பண்ண ஆரம்பிச்சுட்டாங்களாம் தொண்டர்கள். விஷயத்துக்கு வருவோம் திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் பிரிந்தபின்னர் அதிமுகவை தொடங்கினார் அது ஊரரிந்த ரகசியம், எம்.ஜி.ஆர் மறைவிற்குப்பின் அதிமுக ஜா ஜெ என இரண்டாக உடைந்தது அதில் ஜெ கை ஓங்க, ஜானகி மெளணமாக ஒதுங்கிக்கொள்ள ஜெ. விஸ்வரூம் எடுத்தாங்க கட்சியை தன்னுடைய முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்தாங்க, அதனால் கடுப்பான நால்வர் எஸ்.டி.எஸ் தலைமையில் தனியாக கட்சி ஆரம்பிச்சு அது போனியாகமா மீண்டும் அதிமுகவிலேயே ஐக்கியமானாங்க, அதன்பின்னர் திருநாவுக்கரசர், கு.ப.கிருஷ்ணன், ராஜகண்ணப்பன்னு எல்லோரும் முட்டி மோதி பார்த்தாங்க ஆனா ஆட்டவும் முடியல அசைக்கவும் முடியல அதன்பின்னாடி அதாவது ஜெயலலிதா மரணத்தைத்தொடர்ந்து கட்சியை ஏக மனதாக சசிகலா கைப்பற்றினாலும், அதற்கு செக் வைத்தது மத்திய அரசு வழக்கை தூசிதட்டி பார்ப்பன அக்ரஹார சிறையில் பக்காவா பேக் பண்ணி ஓரங்கட்டிட்டாங்க வெளியே வந்தபின் அடங்கி போயிடுவாங்கனு பார்த்தா அவரால் கொம்பு சீவி வளர்க்கப்பட்டவரை வைத்தே குடைச்சல் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க அந்த குழு மட்டும் ஒன்றாக இணைந்து சின்னம்மா ஆதரவாளர்களாக வெளியே காட்டிக்காட்டியும் ”தேனீ ” போல ஈபிஎஸ் குரூப்பை கொட்டி தீர்த்துகிட்டே இருந்தாங்க
இந்நிலையிலதான், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வாசிக்க இருக்கு. அதிமுகவின் பொதுக்குழுவை கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆதரவாளர்கள் கூட்டியது. அந்த பொதுக்குழுவில் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்றறிருந்த சட்ட விதி ரத்து செய்யப்பட்டது; அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டது, அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது என இயற்றப்பட்ட தீர்மானங்கள் அன்றைக்கு தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றாலும் இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றம் வரை சென்றது.
இவ்வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது செல்லும் என தீர்ப்பளித்தது. அதேநேரத்தில் ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் எனவும் தீர்ப்பு வழங்கியது. இதனடிப்படையில் அதிமுகவில் இருந்து தாங்கள் நீக்கப்பட்டதை எதிர்த்தும் ஜூலை 11 பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது எனவும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் செல்லாது எனவும் அறிவிக்கக்கோரியும் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன், வைத்திலிங்கம் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இம்மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இவ்வழக்கின் விசாரணை மொத்தம் 7 நாட்கள் நடைபெற்றது. பின்னர் இருதரப்பும் எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்திருந்தன. இதையடுத்து இவ்வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் உள்ளிட்டோர் 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று தீர்ப்பளிக்கிறது மஹா,
அப்படினா இன்றைக்கு BREAKING NEWSக்கு பஞ்சம் இருக்காது அப்படித்தானே தலைவரே. மஹா, நீ பஞ்சத்தபத்தி பேசுற நான் யாருக்கு பங்கம் ஏற்படப்போகுதோனு காத்துகிட்டு இருக்கேன். எப்படியும் 11 மணிக்குள்ள விஷயம் வீதிக்கு வந்துடும் அப்புறம் பார்க்கலாம் மஹா ! அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 20ம் தேதி மிகப் பிரம்மாண்டமான மாநாடு மதுரையில் நடத்தப்பட்டது. இந்த மாநாடு பேசுபொருளாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கு மஹா என்ன நடக்குது பார்க்கலாம். சரி அதுக்குல்லா நான் குளிச்சுட்டு கோவிலுக்கு போயிட்டு வந்துடுறேன்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision