திருச்சி அரசு பள்ளி மாணவன் கலா உத்சவ் போட்டியில் தேசிய அளவில் முதலிடம் - முதல்வரிடம் பாராட்டு!
"தனியார் பள்ளிகள்தான் சிறந்தவை அரசுப்பள்ளிகளில் ஏதோ பாடம் எடுக்கிறார்கள்" என்ற தவறான புரிதல் இன்னும் பல பெற்றோர்களிடம் இருந்து தான் வருகிறது. ஆனால் இன்றளவும் பல அரசு பள்ளிகள் கல்வியோடு நின்றுவிடாமல் மாணவர்களின் வருங்கால வாழ்க்கைக்கும் துணை புரிகிறது என்றால் அது மிகையாகாது. சத்தமில்லாமல் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில் நடத்தப்பட்ட தேசிய அளவில் நடைபெற்ற கலா உத்சவ் -2020 எனப்படும் தேசிய கலை விழா போட்டியில் திருச்சியை சேர்ந்த அரசு பள்ளி மாணவன் முதலிடம் பிடித்து தமிழகத்திற்கும் நம்முடைய திருச்சிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
திருச்சி சிறுகனூர் பகுதியை சேர்ந்தவர் வசந்த் (15). அப்பா சேகர் அரசு பேருந்து ஓட்டுநராகவும், அம்மா விவசாயம் செய்து சிறுகனூர் பகுதியில் வசித்து வருகின்றனர். வசந்த் அங்குள்ள சிறுகனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில்தான் மனிதவள மேம்பாட்டு துறையினர் சார்பில் நடத்தப்படும் தேசிய கலை விழா (கலா உத்சவ் -2020) போட்டியில் முதலில் பள்ளி அளவிலும், மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் அடுத்ததாக தேசிய அளவிலும் கலந்துகொண்டு அனைத்து இடங்களிலும் முதலிடம் பிடித்து பாராட்டு சான்றிதழ்களும் மற்றும் 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும் பெற்று அசத்தியுள்ளார்.
Advertisement
மத்திய மனிதவள மேம்பாட்டு துறையினர் சார்பில் நடத்தப்படும் இந்த கலா உத்சவ் போட்டியானது மாணவ-மாணவிகளின் கலைத்திறனை ஊக்குவிக்கவும், பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் விதமாக கடந்த 2015ஆம் ஆண்டு முதல் வருடம் தோறும் நடைபெற்று வருகிறது. இதில் 9ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் பங்கேற்கலாம். இதில் நடனம், இசை, ஓவியம் ஆகிய போட்டிகள் நடைபெறும். இதற்கு இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் பங்கேற்பார்கள்.
Advertisement
அந்த வகையில் தேசிய அளவில் முதல் இடம் பிடித்த நம்ம ஊரு சாதனை மாணவன் வசந்திடம் தொடர்பு கொண்டு பேசினோம்.... "சிறுவயது முதலே ஓவியம் நன்றாக வரைவேன். என்னுடைய பள்ளி ஆசிரியர் ரவி சாரின் வழிகாட்டுதலின்படி கடந்த வருடம் 2019ம் ஆண்டு இந்த கலா உத்சவ் போட்டியில் பங்குபெற்றேன். ஆனால் மாநில அளவில் மூன்றாம் இடம் தான் பிடிக்க முடிந்தது. ஆனால் தற்போது இந்த வருடமும் முயற்சி செய்து முதலில் மாவட்ட அளவிலும் அடுத்து மாநில அளவிலும் பங்கு பங்கு பெற்று இரண்டிலுமே ஓவியத்தில் முதலிடம் பிடித்தேன். அதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பல மாணவர்கள் கலந்து கொண்டதில் தேசிய அளவிலும் முதலிடம் பிடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இதற்காக சமீபத்தில் நடைபெற்ற முதல்வர் நிகழ்ச்சியில் தேசிய அளவில் முதலிடம் பிடித்ததற்கு முதல்வர் மற்றும் அமைச்சரிகளிடம் பாராட்டு பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னைவிட என்னுடைய தந்தை தான் அதிகமான ஆனந்தத்தில் இருந்தார். தற்போது பதினோராம் வகுப்பு படித்து வருகிறேன் அடுத்ததாக நீட் தேர்விற்காக பயிற்சி பெற உள்ளேன். இன்னும் வரும் காலங்களில் ஓவியத்தில் அதிக சாதனைகள் படைப்பேன்" என்கிறார் புன்னகையுடன் வசந்த்!
சத்தமில்லாமல் தேசிய அளவில் நடைபெற்ற கலா உத்சவ் போட்டியில் கலந்து கொண்டு முதல் இடம் பிடித்த நம்ம ஊரு சாதனை மாணவனுக்கு திருச்சி விஷன் சார்பாக வாழ்த்துக்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய