திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி அங்கீகாரம் ரத்தாகும் - அமைச்சர் பேட்டி
சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் துவக்கி வைத்தனர்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன் கூறுகையில்....... அறிவிக்கப்பட்ட முகாம்களை விட அதிக அளவிலான முகாம்கள் நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் மூன்று இடங்கள் வீதம் 1500க்கும் கூடுதலான இடங்களில் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. தொழு நோய், காச நோய், கருப்பை வாய் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய் கண்டறிதல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் 1779 மருத்துவமனைகளில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் குறித்தான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திருச்சி, ஸ்டான்லி, தர்மபுரி ஆகிய மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் பழமை வாய்ந்தவை. திருச்சி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரிகளில் படிக்கின்ற மாணவர்கள் பெரிய அளவிலான மருத்துவ சேவையை ஆற்றி வருகின்றனர். இக்கல்லூரிகளில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. ஆனால் ஒரு சில இடங்களில் பழுதுபட்டுள்ளன. அதனை சரி செய்து கொடுத்து விடுவோம். இதற்காக உடனடியாக மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து என்ற செய்தியை பெரிதாக வெளியிடுவது மக்கள் நல்வாழ்வுத் துறையின் சேவைக்கு செய்கிற சிறிய அளவிலான குறையாக இருக்கிறது. இதற்காக வருத்தப்படுகிறோம்.
சின்ன குறைகளுக்காக அங்கீகாரத்தை ரத்து செய்கிறோம் என்ற பெரிய வார்த்தை என்பது இந்த மாநிலத்தின் மீது அவர்கள் காட்டுகின்ற பாகுபாட்டை வெட்ட வெளிச்சமாக்குகிறது. இதேபோல தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களை பார்க்கிற போது உங்கள் மேல் தவறு இல்லை, முறையாக செய்து இருக்கிறீர்கள் உங்கள் மீது என்ற குற்றமும் இல்லை என்று சொல்லிவிட்டு வெளியில் வந்து ஆளுநரின் கூற்றுக்கு சப்பை கட்டு கட்டுவது போல சொல்லிவிட்டு சென்றுள்ளனர்.
தேசிய மருத்துவ ஆணையமும் கூட சிசிடிவி கேமரா இல்லாததற்கு மருத்துவ கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்வோம் என்பது அதிகபட்சமான ஒன்று. இதற்காக விரைவில் என்ன மாதிரி கோரிக்கைகளை வலியுறுத்துவது என்பது குறித்து முதலமைச்சரின் அறிவுறுத்தலை பெற்று மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் ஆயுஷ் அமைச்சர்களை சந்தித்து எடுத்து சொல்ல உள்ளோம். தமிழ்நாட்டில் இருக்கிற கட்டமைப்புகளை குறை சொல்வது போன்ற நடவடிக்களை தவிர்த்துக் கொள்வது நல்லது.
அடுத்தாண்டு தேர்தல் வருகின்ற காரணத்தினால் தேசிய அளவிலான அமைப்புகள் எல்லாம் தமிழ்நாட்டை நோக்கி வந்து இது போன்ற குற்றம் குறைகளை பூதக்கண்ணாடி வைத்து தேடி பெரிது படுத்தலாமா என நினைப்பது சரியான காரியம் அல்ல. இது கைகூடாது. மத்திய அரசு இது மாதிரி ஆணையங்களை மாநில அரசுக்கு எதிராக பயன்படுத்தி மத்திய - மாநில அரசு உறவுக்கு எதிராக, மாநில உரிமைகளுக்கு எதிராக எந்த செயல்களை செய்தாலும் அவர்களுக்கே பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது கடந்த காலங்கள் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த விஷயத்திலும் சற்று பொறுமையாக இருப்பது நல்லது
அரை மணி நேரம் ஒரு மணி நேரத்தில் சரி செய்யக்கூடிய பிரச்சனைகளுக்கு எல்லாம் அங்கீகாரம் ரத்து என்பது சரியானதல்ல. இதன் மூலம் மாணவர் சேர்க்கையில் எந்த பாதிப்பும் வராது என நினைக்கிறோம். எந்த வகை கொரோனா வந்தாலும் பாதுகாத்துக் கொள்வதற்கான கட்டமைப்புகள் தமிழ்நாட்டில் உள்ளது என தெரிவித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn