90'S கிட்ஸ்களுக்கு மீண்டும் நினைவூட்டும் திருச்சி ஜவ்வு மிட்டாய் தாத்தா!!

90'S கிட்ஸ்களுக்கு மீண்டும் நினைவூட்டும் திருச்சி ஜவ்வு மிட்டாய் தாத்தா!!

கால மாற்றங்கள் மாறிக்கொண்டே வருகிறது. கால மாற்றங்கள் மாற மாற நம் வாழ்வியல் முறையும் மாறிக்கொண்டே வருகிறது. ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் அவனுக்கு முக்கியம் சத்தான உணவு. பண்டைய காலங்களில் ஒரு மனிதர்கள் நூறு வயது வரை எவ்வித நோய் நொடியின்றி வாழ்ந்து வந்தனர். ஆனால் தற்போது 30 வயதிலேயே ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய்,மன அழுத்தம்,புற்றுநோய் என அனைத்து வகையான வியாதிகளும் வந்துவிடுகிறது.

Advertisement

நம் முன்னோர்கள் உணவே மருந்து மருந்தே உணவு என்றார்கள். ஆனால் தற்போதைய சூழலில் துரித உணவு அதிகரித்து வருகிறது. துரித உணவினால் வயிறு நிறைந்தாலும் துரித உணவு அதிகம் உண்பவர்களுக்கு வயிற்றுப்போக்கு, மூளை வளர்ச்சி குறைபாடு, மலச்சிக்கல், புற்றுநோய் உள்ளிட்ட வியாதிகள் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள். நாவுக்கு சுவையூட்டும் பீட்சா, பர்கர், சாண்ட்விச் என வெரைட்டி வெரைட்டியாக 200 ரூபாய் 500 ரூபாய் என வாங்கி சாப்பிடுவதை விட, ஒருமுறை 90's கிட்ஸ் சாப்பிட்ட தேன் மிட்டாய், கடலை மிட்டாய், பஞ்சு மிட்டாய், ஆசை சாக்லேட் ருசித்துப் பார்ப்போமே? 

90களில் பள்ளிக்கூடம் நுழைவாயில்களில் வயதான பாட்டி கூடை நிறைய மிட்டாய் வகைகள், மாங்காய், நாவல்பழங்களை 10 பைசா 50 பைசா என சத்தான தின்பண்டங்களை விற்பனை செய்வதை பார்த்திருப்போம். அதே போல ஜவ் மிட்டாய் அதன் ருசி தனி! இன்றைய 2k கிட்ஸ்சிடம் ஜவ்மிட்டாய் வேண்டுமா என்று கேட்டால் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி அது என்ன ஜவ்வு மிட்டாய்.

சர்க்கரை, தண்ணீர், சிறிது கலர் பவுடரை சேர்த்து முதல் பதத்தில் எடுப்பது தான் இந்த ஜவ்வு மிட்டாய். ஒரு மூங்கில் மரத்தில் மேலே ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு நடுவில் ஜவ்வு மிட்டாயை சுற்றி குழந்தைகளை கவர வாயில் பீபி ஊதிக்கொண்டே விற்பனை செய்வார். இந்த மிட்டாயில் நெக்லஸ், மயில், கோழி என சிற்பிகளை மிஞ்சும் அளவிற்கு இரண்டு விரல்களில் அந்த ஜவ்வு மிட்டாய் வடிவமைக்கும் விதம் காண கிடைக்காத ஒன்று. 

 

இதுகுறித்து திருச்சியில் ஜவ்வு மிட்டாய் விற்ற தாத்தாவிடம் பேசினோம்....

"என் பெயர் ராமையா. நான் மதுரை. எனக்கு 60 வயது ஆகிறது, எனக்கு ஒரு மகன் உள்ளார். அவர் ஓட்டுநராக உள்ளார். நான் ஜவ்வு மிட்டாய் விற்கும் தொழிலை 50 வருடமாக செய்து வருகிறேன். எனக்கு முன்னதாக என் அப்பா,தாத்தா,கொள்ளுத் தாத்தா என பரம்பரை பரம்பரையாக இந்த தொழிலை செய்து வருகிறோம். ஜவ்வு மிட்டாய் செய்வதற்காக 500 ரூபாய் ஆகும் சராசரியாக 300 ரூபாய்க்கு விற்பனை செய்வேன். என் மகன் காலத்து கிட்ஸ்களுக்கு ஜவ்வு மிட்டாய் மீது இருந்த ஆர்வம் இப்போது இருக்கும் குழந்தைகளுக்கு இல்லை என வருத்தம் தெரிவித்தார்.இந்த மிட்டாய் எப்படி சுவைப்பது என்று தற்போதுவுள்ள குழந்தைகளுக்கு தெரிவதில்லை. பெற்றோர்கள் குழந்தைகளை கட்டாயப்படுத்தி ஜவ்வு மிட்டாயை சுவைக்க சொல்வதாக ஜவ்வு மிட்டாய் தாத்தா ராமையா" தெரிவித்தார்.

என்னவாக இருந்தாலும் இந்த பழைய தின்பண்டங்கள் எல்லாம் பார்க்கும்போது நம்முடைய பள்ளி பருவ நினைவுகள் சட்டென மனதில் தோன்றி மறையும் அத்தருணம் இனிமை மிக்கது தானே!