ரயில்வே துறை அமைச்சர் சந்தித்த திருச்சி எம்பி

திருச்சி தொகுதி மக்களுக்கான இரயில்வே துறை சார்ந்த எனது கோரிக்கைகளுடன், அவர்களின் பிரதிநிதியாக ஒன்றிய இரயில்வே அமைச்சரை சந்தித்தேன். கோரிக்கைகளைப் பெற்றுக் கொண்டு, எனது பிறந்தநாளை நினைவுப்படுத்தி எனக்கு வாழ்த்து தெரிவித்தார். நன்றி பாராட்டிக் கொண்டதோடு எனது கோரிக்கைகளின் தேவை குறித்தும் எடுத்துரைத்தேன்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நிறைவடைந்த பின்னர், ஒன்றிய இரயில்வேத் துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து, திருச்சி தொகுதி மக்களின் இரயில்வே துறை சம்பந்தமான கோரிக்கைகளை முன்வைத்து உரையாடினேன்.
இரயில்வே மானியக் கோரிக்கை மீதான எனது முந்தைய உரையில் குறிப்பிட்ட, 1. திருச்சி - திருப்பதி, 2. திருச்சி - எர்ணாகுளம், 3. திருச்சி - பெங்களூர் இன்டர்சிட்டி ஆகிய வழித்தடங்களில் இரயில்களை இயக்க வேண்டும் என்பதை நினைவூட்டினேன்.
குறிப்பாக, திருச்சி தொகுதி மக்களின் முதன்மைக் கோரிக்கையான, தினமும் இரவு திருச்சியில் இருந்து புறப்படும் திருச்சி - திருப்பதி இருவழி இரயில் சேவையை உடனடியாக நிறைவேற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்தேன். மேலும், 15 ஆண்டுகளாக நிறைவேறாத உடையன்பட்டி மற்றும் இனாம்குளத்தூரில் இரயில்வே மேம்பாலம் (Road over bridge - ROB) அல்லது போக்குவரத்து சுரங்கப்பாதை (Vehicle Subway) அமைக்க வேண்டும் எனவும் கோரினேன்.
பத்தாண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு, பொருளாதார சாத்தியமின்மை என்ற காரணம்காட்டி நிறுத்தப்பட்ட மதுரை - புதுக்கோட்டை - கந்தரவக்கோட்டை - தஞ்சாவூர் இரயில்வே வழித்தடத்தின் தேவையையும் எடுத்துரைத்தேன்.திருச்சி தொகுதியில் பின்தங்கிய பகுதியான புதுக்கோட்டையில் ஒரு சில பகுதிகளில் விவசாயம் செய்ய இயலாத அளவு வானம் பார்த்த பூமியாகவும், கந்தரவக்கோட்டையில் முழுமையாக விவசாயமோ, தொழிற்சாலைகளோ இல்லை.
ஆனால், ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள் நிறைந்த இப்பகுதியில் இவ்வழித்தடம் அமைந்தால், ஆன்மீக சுற்றுலா, பொருளாதார முன்னேற்றம், போக்குவரத்து மற்றும் கட்டுமான வளர்ச்சி பெறும்; மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என வலியுறுத்தி, இப்பணியைத் தொடங்க வேண்டினேன்.இக்கோரிக்கைகளை மறுமலர்ச்சி திமுக நிர்வாகியாகவோ, இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினராகவோ முன்வைக்கவில்லை; திருச்சி தொகுதி
மக்களின் பிரதிநிதியாக மட்டுமே முன்னிற்கிறேன் எனக் கூறினேன். அமைச்சர், கோரிக்கைகளைச் செயல்படுத்துவதாக உறுதியளித்தார்.அப்போது, எனது பிறந்தநாளை நினைவுகூர்ந்து வாழ்த்து தெரிவித்தார். நன்றி கூறி விடைபெற்றேன்.
அமைச்சரையோ, அதிகாரிகளையோ சந்தித்தாலும், தொகுதி மக்களின் பிரதிநிதியாகவே என்னை முன்னிறுத்தி, அவர்களுக்குப் பயனளிக்கும் வழியில் பணியாற்றுகிறேன். இது என் குணமாக இருப்பினும், மக்களுக்கு அதிக பயன் கிடைக்கும் வழிமுறையே எனது பணியென நான் பெருமிதம் கொள்கிறேன். என்று துரை வைகோ கூறினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision