திருச்சி பாராளுமன்ற தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் சதவீதம் மற்றும் முழு விபரம்

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் சதவீதம் மற்றும் முழு விபரம்

திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி பாராளுமன்றத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையமான ஜமால் முகமது கல்லூரியில் தேர்தல் நடத்தும் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மாபிரதீப் குமார் மற்றும் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் (பொது) தினேஷ் குமார் ஆகியோர் தலைமையில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் இன்று (20.04.2024) வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது.

நடந்து முடிந்த திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் 139-ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் 72.87 சதவீதமும், 140-திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்ற தொகுதியில் 61.75 சதவீதமும், 141-திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 62.46 சதவீதமும், 142-திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் 66.62 சதவீதமும், 178-கந்தர்வகோட்டை (தனி) சட்டமன்ற தொகுதியில் 73.80 சதவீதமும், 180-புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 68.32 சதவீதமும் என திருச்சிராப்பள்ளி தொகுதிக்கான பாராளுமன்ற தேர்தலில் என 67.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதியில் 7,57,130 ஆண் வாக்காளர்களும், 7.96,616 பெண் வாக்காளர்களும், 239 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 15,53,985 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 5,12.264 ஆண் வாக்காளர்களும், 5.36,844 பெண் வாக்காளர்களும் 102 மூன்றாம் பாலின வாக்களர்களும் என மொத்தம் 10,49.210 வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்தியுள்ளனர். ஆண் வாக்காளர்கள் 67.66 சதவீதமும், பெண் வாக்காளர்கள் 67.39 சதவீதமும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 42.68 சதவீதமும் என மொத்தம் 67.52 சதவீத வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். பதிவான வாக்குகளை வருகின்ற (04.06.2024) செவ்வாய்கிழமை அன்று திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் எண்ணப்படவுள்ளது.

வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள். கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கொண்டு வரப்பட்டது. வாக்கு எண்ணும் மையமான திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் முழுவதும் கண்கானிப்பு கேமராக்கள் மூலம் கண்கானிக்கப்பட உள்ளது.

திருச்சிராப்பள்ளி பாராளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் அந்தந்த தொகுதிக்காக அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு மையங்களில் எந்தெந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரப்பெற்றுள்ளது என்பது குறித்த தகவல்கள் சரிபார்க்கப்பட்டு பின்பு பாதுகாப்பறையில் வைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில், அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் இருந்து வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரங்கள் ஆகியன முறையாக, பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் மற்றும் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் (பொது) தினேஷ் குமார் ஆகியோர் தலைமையில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்புடன் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது திருச்சிராப்பள்ளி மாநகர காவல் ஆணையர் காமினி, மாவட்ட வருவாய் அலுவலர் ர.ராஜலட்சுமி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலைகள் நிலமெடுப்பு) ஆர்.பாலாஜி, திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அருள், மாவட்ட வழங்கல் அலுவலர் மீனாட்சி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ந.சீனிவாசன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் எஸ்.குமார் மற்றும் அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision