திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேர் திருவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!!

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேர் திருவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!!

Advertisement

வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் தைமாதத்தில் பூபதித்திருநாள் எனப்படும் தைத்தேர் உற்சவம் நடைபெறுவது வழக்கம். 

அதன்படி இந்த ஆண்டு தைத்தேர் உற்சவமானது கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் திருச்சிவிகை, ஹம்ச, யாளி, இரட்டை பிரம்பை, கருட, குதிரை, சேஷம், ஹனுமந்தம், கற்பக விருட்சிக, யானை ஆகிய வாகனங்களில் நம்பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்தார். விழாவின் முக்கிய 9ம்திருநாளான இன்று அதிகாலை உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் புறப்பாடு நடைபெற்றது. 

Advertisement

அதன் பின்னர் திருத்தேரில் உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் எழுந்தருளினார். காலை 6 மணிக்கு நம்பெருமாள் எழுந்தருளிய திருத்தேரின் வடத்தை பிடித்து ஏராளமான பக்தர்கள் ரெங்கா ரெங்கா கோஷமிட்டபடி, பக்தி பரவசத்துடன் தேரை இழுத்தனர். 

Advertisement

பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி நம்பெருமாள் எழுந்தருளிய திருத்தேரானது நான்கு உத்திரவீதிகளில் வலம் வந்தது. ஸ்ரீரங்கத்தில் வருடத்திற்கு 3 தேரோட்டங்கள் நடைபெறும், மற்ற தேரோட்டங்களில் நம்பெருமாள் மட்டுமே தேரில் எழுந்தருளி வலம் வருவார். ஆனால் இந்த பூபதித்திருநாள் எனப்படும் தை தேரோட்டத்தில் மட்டுமே நம்பெருமாள் உபயநாச்சியாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தருளுவார் என்பது குறிப்பிடத்தக்கது. தை தேரோட்டத்தினை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்