திருச்சி திருவானைக்காவல் கோவில் தேரோட்டம் -ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Mar 23, 2023 - 20:45
Mar 23, 2023 - 21:04
 449
திருச்சி திருவானைக்காவல் கோவில் தேரோட்டம் -ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமானதும், சுமார் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயமும், செங்கோட்சோழனால் கட்டப்பட்டதுமான திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேசுவரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனித்தேரோட்டம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி பிரம்மோற்சவ திருவிழாவான பங்குனி திருவிழாவானது பெரிய கொடியேற்றத்துடன் கடந்த மார்ச் 1ம் தேதி துவங்கியது.

இதனையடுத்து தினசரி சுவாமி, அம்பாளுடன் ரிஷபவாகனம், காமதேனுவாகனம், சூரியசந்திர பிரபை வாகனம் என பல்வேறு வாகனங்களில் வீதிஉலா கண்டருளும் வைபவம் நடைபெற்றுவந்தது. 6ம் திருநாளான இன்று (23.03.2023) விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட இரண்டு பிரம்மாண்டமான திருத்தேரில் சுவாமியும், அம்பாளும் ஒருதேரிலும், அகிலாண்டேசுவரி தாயார் ஒருதேரிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்,

பின்னர் தென்னாடுடைய சிவனே போற்றி, ஓம் நமச்சிவாயா என பக்தி கோஷமிட்டவாறு சிவனடியார்கள் முன்செல்ல திருத்தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்துச்சென்றனர். முதலாவதாக சுவாமியும், அம்பாளும் அருள்பாலித்த தேரை பக்தர்கள் இழுத்துவந்து நிலைக்கு வந்தபின்னர், அகிலாண்டேஸ்வரி தாயாரின் தேர் வடம்பிடித்து இழுத்துச்செல்லப்பட்டது.

தேரானது 4 வீதிகளிலும் வலம்வந்து பின்னர் நிலையை வந்தடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு தரிசனம்  பெற்றனர். பாதுகாப்பிற்காக நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுளை இந்துசமய அறநிலையத்துறையினர் மேற்கொண்டிருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn