தெற்காசியாவிலேயே மிகப்பெரிய மியாவாக்கி காடு உருவாக்கும் திருச்சி இருங்களூர் ஊராட்சி

தெற்காசியாவிலேயே மிகப்பெரிய மியாவாக்கி காடு உருவாக்கும் திருச்சி இருங்களூர் ஊராட்சி

தெற்காசியாவிலேயே அதிக மரக்கன்றுகளை நட்டு மிகப்பெரிய மியாவாக்கி அடர்வனத்தினை அரசு சார்பில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் இருங்களூர் ஊராட்சியில் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

Advertisement

இன்றைக்கு சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இருங்களூர் ஊராட்சி மன்ற தலைவர் வின்சென்ட் அவர்கள் நம்மோடு இந்த காட்டின் சிறப்புக்குறித்து பல தகவல்களை சுவாரசியமாக பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில்,"நம் காடுகள் வளமுடன் இருக்கும் வரை நாம் நலமுடன் வாழலாம்" இந்த வரிகளினை மறந்து நம்முடைய தேவைகளுக்காக மரங்களை அழித்ததால் இன்றைக்கு இயற்கை சார்ந்த பிரச்சினைகளை சந்தித்து வருகின்றோம். குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் பலரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணித்துக் கொண்டிருக்கும் போது மரங்கள் எத்தகைய முக்கியத்துவம் நம் வாழ்வோடு இணைந்து உள்ளது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. 

ஒவ்வொரு உயிரினங்களோடும் இந்த சுற்றுச்சூழல் வாழ்க்கை சுழற்சிமுறை பிணைந்துள்ளது நாம் அவை அனைத்தையும் அழிக்கும் பொழுதுதான் பல இயற்கை பேரிடர்கள் வருகின்றது. 

மரங்கள் மனிதனுக்கு கிடைத்த மகத்தான வரம். மரங்கள் வாழ்விற்கான ஆதாரமாக உள்ள நிலையில் இதனை அதிகப்படுத்த வேண்டும் என்று சிந்தித்தபோது அரசு சார்பில் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் ஊராட்சிக்கு சொந்தமான பெரிய ஏரி 35 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.

இந்த ஏரிக்கு அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய மியாவாக்கி காடுகள் உருவாக்கும் திட்டத்தை ஜனவரி 1-2021ஆம் தேதி தொடங்கினோம். திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தலைமையில் இந்நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

சுத்தமான காற்றை சுவாசிக்கவும், காட்டின் சூழலில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் காற்று மாசுபாடு குறைத்து இயற்கை சூழலை மீட்டெடுக்கவும் மிகப்பெரிய மியாவாக்கி காடு உருவாக்கும் திட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பணியாளர்களால் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. 

லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன் மியாவாக்கி அடர்வான காடுகள் உருவாக்கும் முயற்சியில் லால்குடி, கல்லக்குடி சமயபுரம், பூனம்பாளையம் பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இருங்களூர்

ஊராட்சியில் 1.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை கிட்டத்தட்ட 15 நாட்கள் 100 நாள் வேலை ஆட்கள் மூலம் செய்து முடித்தோம்.முதல் நாள் மட்டும் 1,500 நபர்கள் இந்த மரம் நடும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பராமரிப்பு பணியை ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 30 முதல் 50 நபர்கள் இந்த பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இயற்கையான ஏரி பகுதி என்பதால் இயற்கையாகவே ஏரி பகுதியில் மரம் வளர்வதற்கான சூழல் உள்ளது வண்டல் மண் என்பதால் அதிக வெகுவிரைவாக 2 முதல் 5 அடி வரை வளர்ந்துள்ளன. 

இயற்கை உரங்களையே பயன்படுத்தி வருகின்றோம் கிராமப்புறங்கள் என்பதால் இங்கு கிடைக்கும் கால்நடைகளின் கழிவுகள் உரங்களாக மாற்றி பயன்படுத்தி வருகின்றோம். மூன்று போர்களை அமைத்து சொட்டுநீர் பாசம் செய்து வருகிறோம். அதுமட்டுமின்றி இந்த காடுகளில் குரங்குகளுக்கு நீர் தேவையை போக்கும் வண்ணம் தொட்டிகளில் நீர் வைத்துள்ளோம். 

மியாவாக்கி காடுகளில் அதிக அளவில் பயன்தரு மரங்களை வைத்துள்ளோம் குறிப்பாக புங்கம், வேப்பம் போன்ற மரங்கள் அதிக அளவு வைத்துள்ளோம்.இவை காற்று சுத்தப்படுத்துவதற்கு உதவுவதால் அது போன்ற மரங்களை வைத்துள்ளோம்.

வருங்காலத்தில் திருச்சியில் உள்ள சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக மியாவாக்கி காடுகள் மாறும் சூழல் உருவாகும்.குழந்தைகளுக்கான பூங்காவை அமைத்து சுற்றுலா தலமாக மாற்ற ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இந்த மரக்கன்றுகள் காடுகளாக மாறும் நிலையில் மாவட்டம் பசுமை மாவட்டமாகவும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து மழை அதிகம் பெறும் மாவட்டமாக மாறும் என்கிறார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd