தூய காற்று இல்லையென்றால் சில வினாடிகளுக்கு மேல் உயிர் வாழ முடியாது - இன்று ஜூன் 15.06.2021 உலக காற்று தினம்

தூய காற்று இல்லையென்றால் சில வினாடிகளுக்கு மேல் உயிர் வாழ முடியாது - இன்று ஜூன் 15.06.2021 உலக காற்று தினம்

காற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக உலக காற்று தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகில் வாழும் உயிர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவைகள் உயிர் வாழ காற்று அவசியம். உயிரினங்கள், தாவரங்களுக்கு காற்றில் உள்ள ஆக்ஸிஜன், கார்பன்டை ஆக்ஸைடு மிகவும் முக்கியம். உணவை உற்பத்தி செய்யும் தாவரங்கள், அதனை உற்பத்தி செய்ய கார்பன் டை ஆக்ஸைடு என்ற கரிய மில வாயுவை உட்கொண்டு பிராண வாயுவான ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. அதே வேளையில் உயிரினங்கள், பிராண வாயுவை உட்கொண்டு கரியமில வாயுவை வெளியிடுகின்றன. உயிரினங்களின் இன்றியமையா தேவையான காற்று, இன்று பல வழிகளிலும் கடுமையாக மாசு அடைந்திருக்கிறது..

காற்றின் தேவையை அறிந்து கொள்ளவும், அதனை மாசு இல்லாமல் பாதுகாக்கப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும். உலக காற்று தினமாக ஜூன் 15 கொண்டாடப்படுகிறது. வடக்கில் இருந்து வீசும் காற்றுக்கு வாடை எனவும், தெற்கில் இருந்து வீசும் காற்றுக்கு சோழகம் எனவும், கிழக்கில் இருந்து வீசும் காற்றுக்கு கொண்டல் என்றும், மேற்கில் இருந்து வீசும் காற்றுக்கு கச்சான் எனவும், வீசும் காற்றுக்கும் கூட பெயர் வைத்து கொண்டாடியது நம் தமிழ் சமூகம்.


பூமியை சூழ்ந்துள்ள காற்று மண்டலம் 78% நைட்ரஜனாலும், 21% ஆக்சிஜனாலும், 1% கரியமில வாயுவாலும், எஞ்சியவை இதர வாயுக்களாலும் நிறைந்துள்ளது. கார்பன் டை ஆக்ஸைடை ஆக்சிஜனாக மாற்றும் மரங்கள் காற்றின் தோழன். அந்த தோழனை வேரறுப்பதால் நச்சு வாயுக்கள் காற்று மண்டலத்தில் பரவுகின்றன. மேலும் அடர்சிகப்பு தொழிற்சாலைகள் மற்றும் பெருகிவரும் வாகனங்கள் வெளியிடும் புகையில் இருந்து வெளியாகும் கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு போன்றவை காற்றில் கலப்பதால் நச்சுப் படலத்தை ஏற்படுத்துகிறது..

இதன் மூலம் நல்ல காற்று மாசடைந்து நச்சுக் காற்றாக மாறுகிறது. இதை சுவாசிப்பதன் மூலம் காய்ச்சல், தலைவலி, கண் எரிச்சல் காசநோய், ஆஸ்துமா, நுரையீரல் புற்று, சுவாசக் கோளாறு போன்ற நோய்கள் உருவாகின்றன. ஒவ்வொரு மனிதரும் குறைந்தது மூன்று ஆண்டுகள் தன்னுடைய வாழ்நாளை இழக்கிறார்கள். விஞ்ஞானத்தின் வளர்ச்சியான தொழிற்சாலைகள் வெளியேற்றும் கந்தகம், நைட்ரஜன் ஆக்ஸைடு போன்றவற்றால் மண்ணில் அமில மழை பெய்வதன் மூலம் மண் எல்லாம் மலட்டுத் தன்மையை கொண்டதாக மாறி வருகிறது..

மனிதன் தன் தேவைக்காக இயற்கையை அழித்தான். மரங்களை வெட்டி காடுகளை அழித்து மனை நிலங்களாக மாற்றினான். நிலத்தைத் தோண்டி நிலக்கரி பெட்ரோல் எடுத்து, இயற்கையை நாசப்படுத்தினான். நிலத்தடி நீரை உறிஞ்சி நீர் இல்லாமல் வறண்ட பிரதேசமாக மாற்றினான். மனிதன் ஐம்பூதங்களையும் பாழாக்கியதன் விளைவுதான் பூமி வெப்பம், பூகம்பம், சுனாமி, வறட்சி, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள். இந்த பஞ்ச பூதங்களின் பாதிப்பு தான் மனிதனை பலவித நோய்களுக்கு ஆளாக்கியுள்ளது. உயிர்கள் வாழ்வதற்கு உணவு, நீர், காற்று ஆகிய மூன்றும் அவசியம் வேண்டியவை தான்.

ஆனாலும், உணவின்றி சில வாரங்கள், நீரின்றி சில நாட்கள் நேரங்களும் உயிர்வாழ நம்மால் முடியும். ஆனால் தூய காற்று இல்லையென்றால் சில வினாடிகளுக்கு மேல் உயிர்வாழ முடியாது. வீட்டுக்கு ஒரு மரம் நடுவோம். காற்று மாசடைவதை தடுப்போம். நம் பூமியையும் அதில் வாழும் அனைத்து உயிரினங்களையும் காக்க,  நம் அடுத்த தலைமுறை சுத்தமான காற்றை சுவாசிக்க இன்றே உறுதி ஏற்போம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve