திருச்சி அரசு மருத்துவமனையில் உலக காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
காச நோய் பரவுதல் பற்றியும் அதை தடுப்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மார்ச் 24ல் சர்வதேச காசநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.அதன்படி,உலக காசநோய் தின விழிப்புணர்வு பேரணியை திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் தலைமை வகித்துமருத்துவமனை முதல்வர். மருத்துவர். K. வனிதாதொடங்கிவைத்தார், காசநோயால் குணம் அடைந்தவர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கியபின்னர் காசநோய் குறித்து அவர் பேசுகையில்,
கி.பி. 1882ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் நாள் டாக்டர்.ராபர்ட் காக் காச நோயை உருவாக்கும் மைக்கோபாக்டீரியம் என்ற நுண்ணுயிரியை கண்டறிந்தார். பொதுமக்களிடையே காச நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24ஆம் நாள் உலக காசநோய் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. நிகழாண்டின் உலக காசநோய் தின கருப்பொருள் "காசநோயை முடிவுக்குக் கொண்டுவர முதலீடு செய்யுங்கள். உயிர்களைக் காப்பாற்றுங்கள்.
"(Invest to End TB.Save lives) என்பதாகும். காசநோய் காற்றின் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு இருமல், தும்மல் ,பேசுதல் போன்ற வழிகளில் பரவுகிறது. தொடர் இருமல் மற்றும் சளி, மாலை நேர காய்ச்சல், சளியில் ரத்தம் வருதல், நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் ,பசியின்மை, உடல் எடை குறைதல் போன்றவை காச நோயின் அறிகுறிகளாகும். ஊட்டச்சத்து குறைபாடு, வறுமை, எய்ட்ஸ் நோய், சர்க்கரை நோய், புகைப்பிடித்தல் ஆகியன காச நோய் உருவாவதற்கான அடிப்படைக் காரணிகளாக இருக்கின்றன. சளி பரிசோதனை மற்றும் நெஞ்சக எக்ஸ்ரே ஆகியன காசநோயை கண்டறிவதற்கான வழிமுறைகளாக உள்ளன. மனிதர்களுடைய தலை முடி மற்றும் நகம் தவிர அனைத்து உடல் உறுப்புகளையும் காச நோய் தாக்கும் அபாயம் இருந்தாலும் 85% நுரையீரல்களைதான் பெரும் அளவில் பாதிக்கின்றது.பன் மருந்து எதிர்ப்பு காசநோய் கண்டறிவதற்கான சிபிநாட்(CBNAAT) கருவி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் காசநோயாளிகள் 6 மாதங்களுக்கு தினமும் உட்கொள்ளும் கூட்டு மருந்து சிகிச்சை முறைகளும் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையின்போது ஊட்டச்சத்து கிடைத்திட அரசு வழங்கும் ரூ.500 நிதி உதவியும் வழங்கப்படுகிறது. இதுவரையில் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளில் 54,406 நபர்களுக்கு காச நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 2,616 நபர்களுக்கு காசநோய் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் 543 நபர்களுக்கு பன் மருந்து எதிர்ப்பு காசநோய் கண்டறியப்பட்டு முறையான சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே முறையான முழுமையான மருத்துவ சிகிச்சை தான் காசநோய் ஒழிப்பிற்கான நிரந்தர தீர்வு என்பதை அனைவரும் உணர வேண்டும். காசநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும்.எக்காரணத்தை முன்னிட்டும் காசநோயின் சிகிச்சையை இடையில் நிறுத்தக் கூடாது.அது மிகவும் ஆபத்தானதாகும் என்றார்.
தொடர்ந்து காச நோய் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடைபெற்ற காசநோய் விழிப்புணர்வு குறித்த கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டியில் பரிசு பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர். E. அருண் ராஜ் மற்றும் மருத்துவக் கல்லூரி துணை முதல்வர். மருத்துவர். A. அர்ஷியா பேகம் முன்னிலை வகித்தனர்.
ஏராளமான மருத்துவ மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர். ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி மெட்ரோ அமைப்பை சேர்ந்த ராஜா, மணி கந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நெஞ்சக நோய் சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் K. ஆனந்த் பாபு, V. அருண் சங்கர்,S.V. ஆஷா ரஞ்சனி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய...