நிமிடங்கள் உயிர்களைக் காப்பாற்றும் - உலக பக்கவாதம் தினம்

நிமிடங்கள் உயிர்களைக் காப்பாற்றும் - உலக பக்கவாதம் தினம்

உலக அளவில் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் பக்கவாதம் நோயின் தன்மை குறித்து மக்களுக்கு தெளிவான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29ஆம் நாள் உலக பக்கவாத தினம் அனுசரிக்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டிற்கான உலக பக்கவாத தினம் "நிமிடங்கள் உயிரை காப்பாற்றும்" என்ற கருப்பொருளை வலியுறுத்துகிறது.

பக்கவாதம் நோய் எந்தெந்த காரணங்களால் வருகிறது? யாரை அதிகம் தாக்குகிறது? இதன் அறிகுறிகள் என்ன? இதிலிருந்து மீள்வதற்கான வழிகளும் உணவுமுறைகளும் என்ன? போன்றவை குறித்தெல்லாம் நரம்பியல் நிபுணர் மருத்துவர் எம்.ஏஅலீம் அளித்துள்ள விளக்கம், 

பக்கவாதம் என்றால் என்ன?

மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டாலோ அல்லது ரத்தக் குழாய் வெடித்து ரத்தம் மூளைக்குள் கசிந்தாலோ பக்கவாதம் ஏற்படுகிறது.

அறிகுறிகள்:

ஒரு பக்கமாக கை, கால் செயலிழத்தல், ஒரு பக்கமாக வாய் கோணல் ஏற்படுதல், பேச முடியாமல் போதல், பேச்சில் தடுமாற்றம், திடீரென ஒரு பக்கமாக கை, கால்களில் உணர்ச்சி குறைதல், ஒரு கண்ணில் பார்வை மறைதல், முற்றிலும் பார்க்க முடியாமல் போதல் அல்லது இரட்டையாக தெரிதல், நடையில் திடீர் தள்ளாட்டம், திடீர் விக்கல் ஏற்பட்டு சாப்பிடும் போது புரை ஏறுவது, திடீர் தலைசுற்றல் ஏற்பட்டு நினைவு இழப்பது ஆகிய அறிகுறிகளில் எது தென்பட்டாலும் அலட்சியப்படுத்தாமல், உடனடி யாக நரம்பியல் நிபுணரின் ஆலோச னையைப் பெறுவது அவசியம்.

காரணங்கள் என்ன?

பக்கவாதம் ஏற்பட உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரித்தல், நீரிழிவு நோய், இதய நோய்கள், புகைப்பழக்கம், மது அருந்துதல், உடல் பருமன், உடலளவில் குறைவாக வேலை பார்த்தல், தூக்கமின்மை ஆகியவை பிரதான காரணம். இவற்றுடன் வயது அதிகமாகும் போது பக்கவாத பாதிப்பு நேரிடுவதற்கான வாய்ப்பும் அதிகம். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபரை 3 மணி நேரத்தில் இருந்து நான்கரை மணி நேரத்துக்குள் மூளை நரம்பியல் நிபுணரிடம் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

சிகிச்சை முறை:

அறிகுறி தெரிந்த 2 அல்லது அதிகபட்சம் 3 மணி நேரத்துக்குள் மருத்துவமனை ( சிறப்பு மருத்துவ வசதி) சென்றுவிட வேண்டும். மருத்துவ உதவி வேகமாக கிடைத்தால் பாதிப்பின் தீவிரம் குறைத்துவிட முடியும். உடனடியாக சிடிஸ்கேன் எடுத்து மூளை அடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வார்கள். அதோடு இசிஜி மூளைக்கான டாப்ளர் ஸ்கேன், சி.டி.ஸ்கேன், எம்.ஆர். ஐ ஸ்கேன் போன்ற பரிசோதனைகளும் செய்யப்படும். இதனோடு நீரிழிவும் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு உள்ளிட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். வேகமாக ரத்த அடைப்பை நீக்கும் மருந்து செலுத்தினால் இந்த பக்கவாதத்தின் பாதிப்பை பெருமளவு குறைக்கவோ குணப்படுத்தவோ முடியும். 

பக்கவாத சிகிச்சைக்குப்பிறகு கடைப்பிடிக்கவேண்டியவை:

மது, புகைப் பழக்கம் இருக்கக்கூடாது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். இறைச்சிகளை தவிர்த்து காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். நீரழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் அப்பளம், ஊறுகாய் ஆகியற்றைத் தவிர்க்க வேண்டும். உணவிலும் உப்பின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். 

பாதிப்பு வந்த பிறகு சிகிச்சை என்பது முழுமையாக குணப்படுத்துவதற்கான வாய்ப்பு பெருமளவு குறைவு. செயலிழந்த பாகங்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு தசைப்பயிற்சிகள் தான் உதவும். இதுவும் தொடக்க நிலையிலேயே செய்ய வேண்டும். இல்லையெனில் படுத்த படுக்கையில் கொண்டு வந்துவிடும். பிறகு அன்றாட தேவைகளுக்கு கூட பிறரை சார்ந்து இருக்க கூடிய நிலைமை உண்டாகிவிடும். நம்முடைய அன்றாட வாழ்க்கையில் சரியான உணவு பழக்க வழக்கங்கள் உடற்பயிற்சி மற்றும் சரியான தூக்கம் இவற்றை முறையாகப் செய்தாலே நோய் வருவதை தடுக்கலாம் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn