இலக்கியத்தில் விருந்தோம்பல்

இலக்கியத்தில் விருந்தோம்பல்

அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று. இந்த தமிழ் இலக்கியப் பாடலை நாம் கேட்டிருக்கிறோம். கேட்டவுடன் சட்டென பலருக்கு இந்த பாடலின் கருத்தும் எழுதியவரும் எந்த பாடல் என்றும் நினைவுக்கு வந்திருக்கும். அதை இன்று நாம் பிள்ளைகளிடம் சொல்வதுகூட இல்லை. பள்ளிப் பாடத்தோடு இந்த நல்ல பாடல்கள் நம்மைவிட்டு அகன்று விடுகின்றன. இந்த கொன்றை வேந்தனில்தான் ஔவையார், தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை, திரைகடல் ஓடியும் திரவியம் தேடு, என்று பல நல்லொழுக்கங்களை நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்.

தாய் தந்தையரை மதிக்க வேண்டும், கடல் கடந்து சென்றேனும் உழைத்து வாழ வேண்டும், என்று ஔவைப் பாட்டி நமக்கு பல நல்ல அறிவுரைகளை கொன்றை வேந்தனில் கூறியிருக்கிறார். வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல அறிவுரைகளை எடுத்து கூறியுள்ள ஔவையார், இந்த கொன்றை வேந்தனில் பல நல்லொழுக்கங்களை, வழிகாட்டுதல்களை கொடுத்திருக்கிறார். அவற்றோடு விருந்தோம்பலை பற்றியும் இரண்டு பாடல்களை கொடுத்திருக்கிறார். விருந்திலோர் கில்லை பொருந்திய ஒழுக்கம் என ஔவைப் பாட்டி கூறியுள்ளார்.

ஒரு குடும்பத்தில் விருந்து உபசரிக்க தெரியாதவர்கள் குடும்பத்தினராகவே இருப்பதற்கு தகுதியற்றவர் இதுதான் வழக்கம் என்று கூறியிருக்கிறார். விருந்தினரை உபசரிப்பதே இல்லறத்தின் தலையாய கடமையாக நமது வாழ்வியலில் இருந்திருக்கிறது என்று இப்பாடலின் மூலம் அற்புதமாக தெரிகிறது. இன்றைய காலகட்டங்களில் நம் திருமண நிகழ்வுக்கு வரவேற்கக்கூட ஊதியம் கொடுத்து ஆட்களை வைக்கிறோம். நம் வீட்டு விசேஷங்களுக்கு வருபவர்களை நாம் உபசரிக்க வேண்டும், வரவேற்க வேண்டும் என்ற கலாச்சாரத்தைக்கூட மறந்து கொண்டிருக்கிறோம்.

இல்லறம் என்பது எந்த அளவுக்கு இருக்கவேண்டும் என்று ஔவையார் மேலும் ஒரு பாடலில் கூறுகிறார். தனக்கு தேவாம்ருதம் கிடைத்தருந்தாலும் வந்த விருந்தினருடன் பகிர்ந்து உண்ண வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். 

உள்ளதை அப்படியே விருந்திந்தினருடன் பகிர்ந்து உண்ண வேண்டும் என்பதை மருந்தே யாயினும் விருந்தோடுண் என கூறியிருக்கிறார். இங்கு மருந்து என்பது அமிர்தம் ஆகும். தனக்கு பிடித்ததை அடுத்தவருக்கு கொடுக்காமல் வைத்துக் கொள்பவர்கள் உள்ளனர், அப்படி அல்லாமல், அமிர்தமே ஆனாலும் விருந்தனருக்குக் கொடுத்துவிட்டு உண்ண வேண்டும் என இப்பாடலில் கூறி உள்ளார்.

உபசரிப்பு அற்புதமாக இருக்க வேண்டும், உபசரிப்பு எப்பொழுதும் இருந்தால் மட்டுமே அது இல்லறத்தில் நல்ல ஒழுக்கமாகும். ஒரு மனிதன், போதும் என்று சொல்லும் ஒரே விஷயம் உணவு மட்டும் தான். ஒருகட்டத்தில் போதும் என்று உணவுக்கு மட்டுமே மனிதனால் சொல்ல முடியும். அதனால் விருந்தினர் போதும் என்று சொல்லும் அளவிற்கு விருந்தோம்பல் செய்ய வேண்டும் என்பதே நாம் அறியப்பட வேண்டும். அமிர்தமாக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டும், எந்த உணவாக இருந்தாலும் போதும் என்று சொல்லும் அளவிற்கு நாம் உபசரிக்க வேண்டும். இல்லற ஒழுக்கம் விருந்தோம்பலில் இருக்கிறது.

அதன்மூலம் ஓர் இல்லத்தின் தன்மை மற்றவருக்கு வெளிப்படும் என்ற கருத்தினை வலியுறித்தி கொன்றை வேந்தனில் ஔவையார் மேற்கூறிய இரு பாடல்கள் மூலம் கூறியுள்ளார். இது போல இலக்கிய பாடல்கள், விருந்தோம்பலை எடுத்துக் கூறி இருக்கிறது என்பதை நாம் மறந்து கொண்டிருக்கிறோம். இந்த தொடரின் முக்கிய நோக்கம், நம் விருந்தோம்பல் ஒழுக்கத்தை இலக்கியப் பாடல்கள் மூலம் நினைவூட்டுவதே ஆகும். தொடர்ந்து விருந்தோம்பல் போற்றுவோம்.

விருந்திலோர் கில்லை பொருந்திய ஒழுக்கம்

மருந்தே யாயினும் விருந்தோடுண்

தொகுப்பாளர் - தமிழூர் கபிலன் 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision