திருச்சி அரசு மருத்துவமனையில் இளைஞர் மாடியிலிருந்து விழுந்தார்:
திருச்சி கல்லுக்குழி அருகே உள்ள முடுக்குபட்டி பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி மீராபாய். இவர்களுக்கு 3 பிள்ளைகள்.
இதில் இளைய மகன் கணேசமூர்த்தி (34). இவர் கோவையில் ஸ்பின்னிங் மில்லில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக இவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமாகவில்லை. இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி திருச்சி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்த போது அவருக்கு காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை நோய் தாக்கி இருந்தது தெரியவந்தது. மருத்துவமனையின் 6வது தளத்தில் உள்ள உள்நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை திடீரென மருத்துவமனையில் 6வது தளத்தின் மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து குதித்தார்.
இதில் படுகாயமடைந்த கணேசமூர்த்தியை மருத்துவமனை ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்த அரசு மருத்துவமனை போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணேசமூர்த்தி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது உடனடியாக தெரியவில்லை. மருத்துவமனை மாடியிலிருந்து நோயாளி ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா பேட்டியளித்து போது கணேசமூர்த்திக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு அடுத்த ஒரு சில நாட்களில் வீட்டிற்கு செல்லும் நிலை இருந்தது. இந்த சமயத்தில் கணேசமூர்த்தி மொட்டை மாடிக்கு சென்று கீழே குதித்துள்ளார். அவர் உள்நோயாளியாக இருந்தபோது உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதனால் சிகிச்சை குறைபாடு காரணமாகவோ, நோய் குணமாகவில்லை போன்ற காரணத்திற்காக அவர் இந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்பில்லை என்றார்.