ஒரு கர்ப்பினி யானையை கொடூரமாக கொலை செய்த மக்கள்! ஆறறிவு படைத்த மனிதனின் புத்தி இவ்வளவுதானா?

ஒரு கர்ப்பினி யானையை கொடூரமாக கொலை செய்த மக்கள்! ஆறறிவு படைத்த மனிதனின் புத்தி இவ்வளவுதானா?

படித்ததற்கே கண்ணீர் வருகிறதே, அந்த
யானைக்கு செய்த நம்பிக்கை துரோகத்துக்கு யானை எப்படி துடித்திருக்குமோ… அன்னாசிப் பழத்துக்குள் வெடிமருந்தை நிரப்பி கொடுத்ததால், வாய் வெடித்து கர்ப்பிணி யானை ஒன்று தண்ணீரில் நின்றபடியே உயிரிழந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கேரளத்தில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சைலண்ட் பள்ளத்தாக்கின் அருகே கர்ப்பிணி யானை ஒன்று காட்டை விட்டு வெளியேறி, அருகிலுள்ள கிராமத்துக்கு உணவு தேடிச் சென்றது. இதனைப் பார்த்து பயந்த மக்கள், தங்களுக்கும் தங்கள் ஊருக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடும் என எண்ணி அன்னாசிப்பழத்துக்குள் வெடிமருந்தை நிரப்பி யானைக்கு உணவாக அளித்துள்ளனர். பழத்துக்குள் வெடிமருந்து இருப்பதை அறியாது பசியில் இருந்த யானை வாங்கிச் சாப்பிட்டது. சிறிது நேரத்தில் வயிற்றுக்குள் பழம் வெடித்து தாங்க முடியாத வலியை அனுபவித்துள்ளது கர்ப்பிணி யானை. இறுதியில் அங்குள்ள குளத்தில் நீரில் நின்றபடியே தனது குட்டியுடன் உயிரை விட்டது.

இந்த கொடூர சம்பவம் குறித்து வன அதிகாரி மோகன் கிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: அவள்(கர்ப்பிணி யானை) அங்குள்ள அனைவரையும் நம்பினாள். அவள் சாப்பிட்ட அன்னாசிப்பழம் வெடித்தபோது கண்டிப்பாக அதிர்ச்சியடைந்திருப்பாள். ஏனென்றால் அவள் இன்னும் 18 முதல் 20 மாதங்களில் ஒரு குழந்தையைப்(குட்டியை) பெற்றெடுக்கப் போகிறாள். அவள் வாயில் வெடித்த பட்டாசு வெடிமருந்து மிகவும் சக்தி வாய்ந்தது. அவளது வாயும், நாக்கும் மிகவும் மோசமாக காயமுற்றுள்ளன. வலியுடன் அவள் கிராமத்தை சுற்றி வந்திருக்கிறாள். ஆனால், அவள் வாயில் ஏற்பட்ட காயத்தால் எதுவும் சாப்பிட முடியவில்லை.

Advertisement

கிராம மக்கள் அவளுக்கு தீங்கு இழைத்த நிலையிலும் அவள் கிராமத்தில் யாரையும் சிறிதளவு கூட துன்புறுத்தவில்லை. எந்த இடத்திலும் கொஞ்சம் கூட சேதம் விளைவிக்கவில்லை. இதனால்தான் சொல்கிறேன். அவள் மிகவும் நல்லவள். இறுதியில் யானை தாங்க முடியாத வலியை சமாளிக்க வெல்லியார் நதி நீரில் இளைப்பாறியுள்ளது. மேலும், அவளது வயிற்றில் ஏற்பட்ட காயங்களில் வந்து அமரும் ஈக்கள் மற்றும் பிற பூச்சிகளைத் தவிர்ப்பதற்காக கூட இதைச் செய்திருக்கலாம். நதியில் இருந்து அவளைக் காப்பாற்ற சுரேந்திரன் மற்றும் நீலகாந்தன் எனும் இரண்டு யானைகளை வன அதிகாரிகள் அழைத்து வந்தனர். ஆனால் அவளுக்கு ஆறாவது உணர்வு இருப்பதாகவே நான் நினைக்கிறேன். உயிரை விடப்போகிறோம் என்று தெரிந்ததோ என்னவோ, அவள் எங்களை எதுவும் செய்ய விடவில்லை.

பல மணிநேர முயற்சிகளுக்குப் பிறகு, மே 27 மாலை 4 மணியளவில் இறந்த நிலையில் அவளை மீட்டோம். ஒரு லாரியின் மூலமாக அவளை காட்டுக்குள் கொண்டு சென்று அவள் விளையாடிய நிலத்தில் படுக்க வைத்து, அவள் மீது விறகு வைத்து தகனம் செய்தோம். அவளது முகத்தில் உள்ள வலியை எங்களால் உணர முடிந்தது. அவளுக்கு மிகுந்த மரியாதையுடன் அனைவரும் பிரியாவிடை அளித்திருக்க வேண்டும். அவள் முன் நாங்கள் தலைகுனிந்து இறுதி மரியாதை செலுத்தினோம் என்று மிகவும் உருக்கமாக தனது எழுத்துகள் மூலமாக யானையின் தாங்க முடியாத வலியை, இழப்பை பதிவு செய்துள்ளார் வன அதிகாரி மோகன் கிருஷ்ணன். யானையின் புகைப்படங்களும், வன அதிகாரியின் இந்த பதிவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் அனைவரிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.