திருச்சி மாவட்டத்தில் ரூபாய் 10,090.85 கோடி கடன் வழங்க இலக்கு - மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் ரூபாய் 10,090.85 கோடி கடன் வழங்க இலக்கு - மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் மாவட்ட அனைத்து வங்கிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக, திருச்சி மாவட்டத்திற்கான நடப்பு நிதியாண்டு 2021-22- திட்ட அறிக்கை மாவட்ட ஆட்சியரகத்தில் வெளியிடப்பட்டது. இத்திட்ட அறிக்கையில் ரூ.10,090.85 கோடி முன்னுரிமைக் கடன்கள் வழங்க, நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்தார்.

திருச்சி மாவட்டத்தில் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,
நபார்டு வங்கியுடன் இணைந்து, 2021-22 நிதி ஆண்டுக்கான திட்ட அறிக்கையை
வடிவமைத்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, 
இத்திட்ட அறிக்கையில் பல்வேறு துறைகளில் வங்கிகள் கடன் வழங்க, வழிவகைகள் கூறப்பட்டுள்ளன.

கடன் திட்ட அறிக்கையில் விவசாயத்துறைக்கு ரூ.5,619.17 கோடி, குறு சிறு நடுத்தர தொழில் துறைக்கு ரூபாய் 1,686.52 கோடி, வீட்டுக் கடன்கள் ரூபாய் 1,335.09 கோடி, கல்விக்கடன் ரூபாய் 490.71 கோடி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சக்திதுறை ரூபாய் 91.67 கோடி, சமூக
உள்கட்டமைப்பு துறை ரூபாய் 170.14 கோடி மற்றும் இதர முன்னுரிமை கடன்கள் 
ரூபாய் 697.55 கோடி, ஆக மொத்தம் ரூபாய் 10,090.85 கோடி கடன் வழங்க இலக்கு
வகுக்கப்பட்டுள்ளது. கடன் திட்ட அறிக்கையை, மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு வெளியிட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திருச்சி மண்டல முதுநிலை மேலாளர் கை.கவலாயுதம் மற்றும் உதவி பொது மேலாளர் கங்காதரன் பெற்றுக்கொண்டனர்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அனைத்து வங்கிகளிடமும், விவசாய தவணை
கடன்கள், சுய உதவிக்குழு கடன்கள், மற்றும் குறு சிறு நடுத்தர தொழில் கடன்களுக்கு அதிக ஒதுக்கீடு செய்யுமாறும், அரசு நிதியுதவி சார்ந்த கடன்களை, வங்கிகள் கால
வரையரைக்குள் பயனாளிகளுக்கு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், திருச்சி மாவட்ட திட்ட இயக்குநர் சங்கர், நபார்டு வங்கி
மாவட்ட மேபாட்டு மேலாளர் மோகன்கார்த்திக், திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் சிவராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சாந்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் க.சத்தியநாராயணன் மற்றும் 
பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KgXsKw3fBDuFxT4NQiE2BW