மழையால் ஏற்படும் நோய்த் தொற்றைத் தடுக்க 126 நடமாடும் மருத்துவ குழு 1161 களப்பணியாளர்கள் நியமனம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

மழையால் ஏற்படும் நோய்த் தொற்றைத் தடுக்க 126 நடமாடும் மருத்துவ குழு 1161 களப்பணியாளர்கள் நியமனம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், தொடர் மழையால் ஏற்படும் தொற்று நோய்களை தடுப்பதற்கான சிறப்பு மழை நிவாரண நடமாடும் மருத்துவ முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் கூறுகையில்... திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மாநகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் 84 நிலை முகாம்களும், 126 நடமாடும் மருத்துவ முகாம்களும் என மொத்தம் 210 முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு சிகிச்சை மற்றும்
விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோய் தடுப்பு முகாம்களில் காய்ச்சல், வயிற்றுப் போக்கு, தோல்வியாதி, பூச்சி மற்றும் விலங்குகளால் ஏற்படும் நோய்கள், நாய்க்கடி, மூச்சுத் திணறல், மஞ்சள் காமாலை, உணவு மற்றும் தண்ணீரால் ஏற்படும் நோய்களை தவிர்க்கும் பொருட்டும் மற்றும் எவருக்கேனும் இத்தகைய அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதாரதுறை மற்றும் உள்ளாட்சி துறையினர் இணைந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர்தருதல், குளோரின் அளவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலும், தெரு மற்றும் வீட்டுக்குழாய்களிலும் உரிய அளவு இருப்பதை உறுதி செய்தல், உடைந்த குடிநீர் குழாய்களை சரிசெய்து நீர்கசிவு உள்ளதா என்பதை கண்காணித்தல் மற்றும் அகற்றுதல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு மற்றும் இதர நோய்த் தடுப்பு நடவடிக்கைக்காக மாவட்டம் முழுவதும் 1161 களப்பணியாளர்கள் நியமிக்கட்டு நோய்தடுப்பு நடவடிக்கைகள் துரிதபடுத்தப்பட்டுள்ளன. புகைதெளிப்பான் மூலம் காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் துரிதபடுத்தப்பட்டுள்ளன.

உள்ளாட்சி அமைப்புகள் மூலம் குப்பை மற்றும் அழுகிய பொருட்களை உடனடியாக
அகற்றுதல், பிளிச்சிங் பவுடர் மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றைக் கொண்டு கிருமிநீக்கம் செய்தல், இறந்து போன விலங்குகள் மற்றும் பறவைகளை அப்புறப்படுத்துதல் முதலிய
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்:
பொதுமக்கள் காய்ச்சி ஆறவைத்த குடிநீரை பருக வேண்டும், வெள்ள பாதிப்பு
பகுதிகளுக்கு தேவையில்லாமல் செல்லக் கூடாது, பொதுமக்கள் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, சிறுகாயங்கள் மற்றும் சிறுஉடல் உபாதைகள் ஏற்பட்டால் அருகிலுள்ள மருத்துவ முகாம்கள்
அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு உடனடியாக சென்று மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று சிகிச்சைபெற வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளும் தேவையான வசதிகள் மற்றும் மருந்துகளுடன் 24 மணிநேரமும் செயல்பட்டு வருகின்றன. மேலும் மருத்துவ முகாம்கள் மற்றும் நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் தேவையான சிகிச்சைகளையும் ககாதார
ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளலாம். அவசர காலங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவையை 24 நேரமும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தொற்று நோய்வராமல் தடுக்க சோப்பு போட்டு அடிக்கடி கைகளை நீரினால் கழுவ வேண்டும். வெள்ளநீரில் நனைந்த உணவுப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. சித்த மருத்துவர்கள் மேற்பார்வையில் வழங்கப்படும் நிலவேம்பு, கபசரக் குடிநீர் அருந்துதல் நலம். மேலும் பொது மக்கள் கட்டணமில்லா 104 அவசரகால மருத்துவ சேவை எண்ணை தொடர்பு கொண்டும் பயன்பெறலாம். வெள்ளம் மற்றும் மழையால் ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளால் தொற்று நோய்கள் வராமலும், பரவாமலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் தடுப்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட அனைத்து துறையினரையும் மாவட்ட ஆட்சித்தலைவர்
அறிவுறுத்தியதுடன், அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு நல்கவேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டார். 
இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் மற்றும் 
சுகாதாரத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn