திருச்சியில் ரேஷன் அரிசியை பதுக்கிய 3 பேர் கைது - 5 டன் அரிசி பறிமுதல்!!

திருச்சியில் ரேஷன் அரிசியை பதுக்கிய 3 பேர் கைது - 5 டன்  அரிசி பறிமுதல்!!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் புவனேஸ்வரி நகர் பகுதியில் உள்ள ஒரு பிளவர் மில்லில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உத்தரவின்படி காவல் துணை கண்காணிப்பாளர் பால்சுதர் மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் புவனேஸ்வரி நகரில் உள்ள அரிசி பிளவர் மில்லில் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர்.

Advertisement

அப்போது சட்ட விரோதமாக 85 மூட்டைகளில் 5 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கடத்தப்படும் அரிசிகளை மாவுகளாக அரைத்து உணவு விடுதிகள் மற்றும் இரவு நேர கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். பின்னர் தனிப்படை போலீசார் 85 அரிசி மூட்டைகளையும் ( 5 டன் ) பறிமுதல் செய்து திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பாக மில் உரிமையாளர் மண்ணச்சநல்லூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் (58) மற்றும் பிளவர் மில்லில் வேலை செய்த காசிக்கடை தெருவைச் சேர்ந்த ரங்கராஜ் (58) இவருடைய மகன் கார்த்திக் (27) ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த பிளவர் மில் உரிமையாளர் தியாகராஜன் மீது திருச்சி உணவு பாதுகாப்பு துறையில் ஏற்கனவே இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement