வழிப்பறி செய்ய திட்டம் தீட்டிய 5 பேர் கைது - சிறுவன் தப்பி ஓட்டம் - பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

வழிப்பறி செய்ய திட்டம் தீட்டிய 5 பேர் கைது - சிறுவன் தப்பி ஓட்டம் - பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

திருச்சி பொன்மலை காவல்நிலைய ஆய்வாளர் திருவானந்தம் உத்தரவின்பேரில், உதவி ஆய்வாளர் வினோத் தலைமையிலான போலீசார், பொன்மலைப்பட்டி பேருந்து நிறுத்திலிருந்து பொன்மலை ஆர்மரிகேட் செல்லும் வழியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பொன்மலைப் பகுதியில் உள்ள பாழடைந்த ரெயில்வே குடியிருப்புக் கட்டிடத்தில் 6 பேர் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். அதில் 17 வயது சிறுவன் மட்டும் தப்பியோடிவிட்டான். மற்ற 5 பேரை போலீசார் சுற்றி வளைத்துப்பிடித்து விசாரித்ததில், அவர்கள் வழிப்பறி செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.

மேலும் அவர்களிடமிருந்து கத்தி, அரிவாள், கம்பு என பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, ஸ்ரீரங்கம் கொள்ளிடம் சாலையைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (21), கீழக்கல்கண்டார்கோட்டை ஆலத்தூரைச் சேர்ந்த சரண்குமார் (23), அதவத்தூரைச் சேர்ந்த அரவிந்த், மேலக்கல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த விஜய் (20), ராம்பிரசாத் (21) ஆகிய 5 பேர் மீதும் பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் ஐந்து பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் பற்றி அப்பகுதியில் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது போன்ற சம்பவம் அடிக்கடி நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்மலையில் உள்ள ரயில்வே பாழடைந்த குடியிருப்பு பகுதிகளை முழுமையாக அகற்ற வேண்டும் என நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision