ஆவரங்காடு ஜல்லிக்கட்டில் 600 காளைகளும் 300 காளையர்களும் பங்கேற்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆவரங்காடு பொன்னர் - சங்கர் ஆலய திடலில், மாபெரும் ஜல்லிக்கட்டு இன்று (17.01.2023) நடைபெற்று வருகிறது. பாலக்குறிச்சி, கலிங்கப்பட்டி, கீரணிப்பட்டி, சோலையம்மாபட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களால் நடத்தப்படும், இந்த ஜல்லிக்கட்டு போட்டியினை ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் செல்வராஜ் கொடியசைத்து போட்டியினை துவக்கி வைத்தார்.
முதலில் நான்கு கிராமங்களின் கோவில் காளைகள் அவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருந்த 600க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்க்கப்பட்டு வருகிறது. காளைகளை அடக்க 50 காளைகளுக்கு 25 காளையர்கள் களம் இறக்கப்படுகிறார்கள். வாடிவாசல் வழியே சீறிபாய்ந்த சில காளைகள் காளையர்களை கலங்கடித்த நிலையில் நின்று விளையாடியது.
சில காளையர்கள் தொட்டு கூட பார்க்க முடியாதபடி சீறிபாய்ந்தது. இருப்பினும் சில காளைகளை வீரர்கள் திமில் பிடித்து அடக்கினர். காளைகளை பிடித்த வீரர்களுக்கு தங்க காசு, வெள்ளிக்காசு, ரொக்கம், கட்டில், பாத்திரங்கள் என பரிசுகள் வழங்கப்பட்டது. அத்துடன் வெற்றி பெற்றவர்களுக்கு தலைக்கவசமும் அளிக்கப்பட்டு வருகிறது. வீரர்களின் கைகளில் பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn