90% வேலைவாய்ப்பை தமிழர்களுக்கு வழங்க வேண்டும் - ரயில்வே பணிமனை முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம்!
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.ஆர்.பி தேர்வில் தேர்வான 400க்கும் மேற்பட்ட வட இந்தியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி ஆணை வழங்கும் பணி திருச்சி பொன்மலை ரயில்வே மண்டபத்தில் நடந்தது வந்தது. இதில் 400க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் சான்றிதழ்களுடன் வெளியில் காத்திருக்கின்றனர்.இவர்கள் ஒரிசா மகாராஷ்டிரா ராஜஸ்தான் போன்ற வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது மாநில அரசிடம் இ- பாஸ் பெற்று விமானம் மூலம் வந்துள்ளனர். திருச்சி விமான நிலையத்தின் சார்பில் இவர்களுக்கு கொரோனா பிசிஆர் பரிசோதனை எடுக்கப்பட்டு முடிவுகள் வந்த பின்னரே இவர்கள் இங்கு வந்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்போதே பணிமனையில் வேலை பார்த்த அப்பரண்டிஸ் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் தேசிய பேரியக்கம், நாம் தமிழர் கட்சி ஆகியோர் பொன்மலை இரயில்வே பணிமனை முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று மத்திய மாநில அரசு பணிகளில் 90% வேலைவாய்ப்பை தமிழக இளைஞர்களுக்கு வழங்க கோரியும், பொன்மலை தென்னக தொடர்வண்டி பணிமனையில் பயிற்சி முடித்த தமிழக இளைஞர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வலியுறுத்தியும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் திருச்சி பொன்மலை பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.