தொண்டர்களை வழிநடத்த தவறிய திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர்!
திருச்சியில் கொரோனா நோய்த்தொற்று 5 ஆயிரத்தை தொட்டுவிட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை இதுவரை 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இந்நிலையில் இன்று திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு தமிழர்களுக்கு 90 சதவீதப் பணி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திமுகவின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தற்போது இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்தவோ, குறிப்பாக கூட்டத்திற்கு வருபவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட நிலையிலும் ரயில்வே பணிமனைக்கு வந்த தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக தனிமனித இடைவெளியின்றி நின்று கொண்டிருந்தனர்.
200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் தனிமனித இடைவெளி முழுமையான கேள்விக்குறியானது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதும் இல்லாமல் கூட்டத்தைக் கூட்டி விட்டு கொரோனாவை பரப்பும் ஒரு ஆர்ப்பாட்டமாக மாறியது. ஏற்கனவே பல எம்எல்ஏக்கள் நோய் தொற்றால் பாதிக்கப்படும் போது திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா என ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர் சமூக ஆர்வலர்கள்.