தடுப்பு சுவரில் வாகனம் ஓட்டிய இளைஞர் மீது 9 பிரிவினில் வழக்கு பதிவு

தடுப்பு சுவரில் வாகனம் ஓட்டிய இளைஞர் மீது 9 பிரிவினில் வழக்கு பதிவு

மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1349வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு கடந்த 23ம் தேதி திருச்சி பாரதிதாசன் சாலையில் ஒத்தக்கடை பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சி பிரதிநிதிகள், அமைப்புகள் சேர்ந்த ஏராளமானோர் இப்பகுதியில் வந்து பேரரசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இது மட்டுமின்றி திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பேரணியாக வந்து மாலை அணிவித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதன் ஒரு பகுதியாக திருச்சி சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் உள்ள கொள்ளிடம் பாலத்தில் சில இளைஞர்கள் சாலையின் நடுவே போக்குவரத்துகளை நிறுத்தி கொடிகளை அசைத்து பொது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தினர். இதன் ஒரு படி மேலாக சாலை நடுவே இருக்க கூடிய தடுப்பு சுவற்றின் மீது இருசக்கர வாகனத்தை ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டனர். ஆபத்தை உணராமல் இப்படி வித்தைகள் செய்து கொண்டாடுவது வாகன ஓட்டிகளிடையே எரிச்சலை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த இளைஞர் வாகனம் ஓட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. 

இதனை தொடர்ந்து பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவையொட்டி, திருச்சி கொள்ளிடம் ஆறு பாலத்தின்மீது அமைக்கப்பட்டுள்ள நேப்பியர் வடிவ பாலத்தின், சாலையின் நடுவில் உள்ள தடுப்புக்கட்டையில் வாகன ஓட்டிகள், பாதசாரிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், இருசக்கர மோட்டார் வாகனத்தை ஓட்டிச் சென்ற திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனாம் பாளையத்தை சேர்ந்த பெருமாள் மகன் குருமூர்த்தி (22) என்பவர் மீது கொள்ளிடம் காவல்நிலைய போலீசார், 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision