ஒரு வாரத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசி கையிருப்பில் உள்ளது

ஒரு வாரத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசி கையிருப்பில் உள்ளது

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனாவிற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் நோயாளிகளுக்கு 450 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் அது அதிகரிக்கப்படும்.
கடந்த ஆண்டு கொரோனா நோயாளிகளுக்கு மட்டும் அதிக அளவில் படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் இந்தாண்டு பிற நோயாளிகளுக்கும் வழக்கம் போல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தவிர இரண்டு இடங்களில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில்  இதுவரை 1,41,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் முன்கள பணியாளர்கள் தவிர 91,000 பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கு தேவையான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை தடுப்பூசிகள் கொண்டு வரப்படுகிறது. போதுமான அளவு தடுப்பூசிகள் உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் முதல் ஒன்னறை லட்சம் ரூபாய் வரை கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 14 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளது. அதில் 3 இடங்கள் புறநகர் பகுதியிலும், 11 இடங்கள் மாநகர பகுதிகளிலும் உள்ளது. ஒரு பகுதியில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால் அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படுகிறது.

கொரோனா பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகமாகிறது அதே நேரத்தில் கொரோனாவிலிருந்து குணமடைபவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகிறது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி காந்தி சந்தையில் சில்லறை விற்பனை மேற்கொண்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr