முத்து பல்லக்கில் அம்மன் திருவீதி உலா.

முத்து பல்லக்கில் அம்மன் திருவீதி உலா.

திருச்சி மாவட்டம் முசிறி மாரியம்மன் கோவில்களில் சித்திரைத் திருவிழாவினை முன்னிட்டு முத்து பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. சித்திரைத் திருவிழா தொடக்க நாளிலிருந்து தினம் ஒரு அலங்காரத்தில் கோவில்களில் உள்ள அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தினம் ஒரு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். தீமிதி திருவிழா முடிவுற்ற பின்னர் 15வது நாள் மேலத்தெரு, பாலத்து மாரியம்மன், கள்ளர் தெரு, ஆகிய கோவில்களின் கரகம் காவேரி ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து மேலத்தெரு மாரியம்மன், சின்ன சமயபுரத்தாள் மாரியம்மன், பாலத்து மாரியம்மன், கள்ளர் தெரு மாரியம்மன் ஆகிய நான்கு கோவில்களில் உள்ள அம்மன் முத்துப்பல்லக்கில் மலர் அலங்காரத்திலும், மின்னொழி அலங்காரத்திலும் முசிறி நகர் பகுதியில் முக்கிய வீதிகள் வழியாக இரவு முழுவதும் திருவீதி உலா வந்தன. இந்நிகழ்வில் திருநங்கைகள் அம்மன் அலங்காரத்தில் ஆடல் பாடலுடன் திருவீதி உலாவில் கலந்து கொண்டனர். அனைத்து சுவாமிகளும் அதிகாலையில் புத்தூர் சாலையில் உள்ள மாரியாயி நகர் முன்பு ஒன்று கூடியவுடன் வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பின்னர் அந்தந்த சுவாமிகள் கோவில் சென்றடைந்தன. ஆண்டாண்டு காலமாக நான்கு சுவாமிகளும் முத்து பல்லக்கில் அமர்ந்து திருவீதி உலா வந்து ஒன்று கூடி வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறுவதை காண திரளான பக்தர்கள் அதிகாலையில் ஒன்று கூடி அம்மனை தரிசனம் செய்தனர்.