நடிகர் கமலஹாசனை ஒதுக்கி வைத்து விடலாம் - திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி

நடிகர் கமலஹாசனை ஒதுக்கி வைத்து விடலாம் - திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி

திருச்சி கே.கே.நகரில் உள்ள அமமுக கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருச்சி வந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்.....எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் நடத்திய பொதுக்குழு செல்லும், என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் பற்றி தீர்ப்பு கூறவில்லை. அதே போல், இந்த தீர்ப்பின் மீது மேல் முறையீடு செய்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

இரட்டை இலை சின்னம், எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கப்பட்டால், இன்னும் பலவீனமடையும். ஓபிஎஸ் தரப்புக்கு இது தற்காலிக பின்னடைவாகத் தான் இருக்கும். தேர்தல் ஆணையத்திலும் மேல்முறையீடு செய்யலாம், என்று கூறியுள்ளனர். சிவில் வழக்கிற்கும், இந்த தீர்ப்புக்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் முதல் சுற்றில் ஓபிஎஸ் வெற்றி பெற்றார். இரண்டு, மூன்றாவது சுற்றுகளில் எடப்பாடிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

இது ஒரு தொடர் போராட்டம். இந்த தீர்ப்பின் மூலம் எடப்பாடி தரப்புக்கு, இடைத்தேர்தலில் கூடுதலாக ஐந்தாயிரம் ஓட்டுக்கள் கிடைக்கலாம். வெற்றி வாய்ப்பை கொடுக்கும் அளவிற்கு ஒன்றும் நடந்துவிடவில்லை. காழ்ப்புணர்ச்சியில் சொல்லவில்லை. அங்குள்ள நிலவரம் இதுதான். ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் நிலை நிலவுகிறது. கடந்த 2017 ஏப்ரலில் இருந்து, டெல்லி தான் அதிமுகவை இயக்குகிறது. 2024 பார்லிமெண்ட் தேர்தலில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் அணியில் அமமுக இருக்கும். ஈரோடு இடைத்தேர்தலில் நடைபெறும் கூத்துக்களை பார்த்தால், தேர்தலை தள்ளித்தான் போட வேண்டும்.

இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் ஒரு சமூகத்தை பற்றி பேசியதாக, அவர் மீது வழக்கு தொடரப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது எனவே, அவர் ஜாக்கிரதையாக தான் பேச வேண்டும். கவர்னராக இருப்பவர் ஜனாதன தர்மம் பற்றியெல்லாம பேசவேண்டியதில்லை.

இருப்பினும் அரசியலமைப்பு சட்டப்படி அந்த பதவியில் இருப்பவரை மதித்து தான் ஆக வேண்டும். தமிழகத்தில் ஆட்சி செய்யும் திமுக, ஐந்து ஆண்டுகளுக்குப் பின் எடுக்க வேண்டிய கட்டப்பெயரை இரண்டு ஆண்டுகளில் எடுத்து, தர்ம சங்கடமான நிலையில் தான் உள்ளது. திமுகவினர் இந்த இடைத்தேர்தலில் தப்பித்துக் கொண்டாலும், பாராளுமன்ற தேர்தலில் பலத்த அடி வாங்கும்.

நடிகர் கமலஹாசனை பொறுத்தவரை, தகுதியான அரசியல்வாதியாகிவிட்டார். அவர் திமுகவை திருப்திப்படுத்த இப்போது பேசிக் கொண்டிருக்கிறார். அடுத்து பார்லிமென்ட் தேர்தலில் சீட்டு வாங்குவதற்காக நான் பெரியார் பேரன் காந்தியின் பேரன் என்றெல்லாம் பேசுவார். அவர் பேச்சை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு, ஒதுக்கி வைத்து விடலாம் என்று தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn