நீண்ட நெடிய போராட்டங்களுக்கு பிறகு முருகன் திருச்சி மாநகர தனிப்படை காவலில்: அன்றிலிருந்து இன்று வரை: நடந்தது என்ன?

நீண்ட நெடிய போராட்டங்களுக்கு பிறகு முருகன் திருச்சி மாநகர தனிப்படை காவலில்: அன்றிலிருந்து இன்று வரை: நடந்தது என்ன?

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” கடந்த மாதங்களாகவே ஹாட் டாபிக் லலிதா ஜுவல்லரி தான். சுவரில் துளை, கைகளில் கிளவுஸ், முகத்தில் மாஸ்க்,  மிளகாய்பொடி என ஹாலிவுட் படங்களையே மிஞ்சும் அளவிற்கு ஒரு கொள்ளை சம்பவம்.திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் நகை கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கும் கடைகள் , விலை குறைவாக கிடைக்கும் சாலையோர கடைகள், பள்ளி கல்லூரிகள் என எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும் இடம்.இதனால் திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நகைகள் மற்றும் பொருட்கள் வாங்க மக்கள் வருவது வழக்கம்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பள்ளி மைதானத்தை ஒட்டி அமைந்துள்ள வணிக வளாகத்தில் லலிதா ஜுவல்லரி இயங்கி வருகிறது…
இங்கு செவ்வாய்க்கிழமை வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டிவிட்டு 6 இரவு  காவலாளிகளை தவிர ஊழியர்கள் அனைவரும் சென்றனர். மறுநாள் காலை புதன்கிழமை வழக்கம்போல் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அலங்கார பொம்மைகள் மீது காட்சிப் படுத்தப் பட்டிருந்த நகைகள் மாயமாய் இருந்தது. மேலும் பக்கவாட்டுச் சுவரில் துளையிட்டு மர்ம நபர்கள் உள்ளே நடமாடியது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தகவலறிந்து வந்த கிளை மேலாளர்
ஹரிராமன் உள்ளிட்டவர்கள் மாநகர காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ்,  துணை ஆணையர்கள் மயில்வாகனன், நிஷா , உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் சுவரை துளையிட்டு 2 மர்ம நபர்கள் முகமூடி அணிந்து உள்ளே நுழைவதும், தரைத்தளத்தில் இருந்த 13 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் 180 கிராம் வைரம் உள்ளிட்ட நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.
மேலும் தாங்கள் நடமாடிய பகுதிகளில் மிளகாய் பொடியை தூவி அலமாரிகளில் உள்ள நகைகளை எடுக்க அலாரம் அடிக்காத வகையில் இரும்பு ராடு களையும் பயன்படுத்தி இருந்தனர். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களும், மோப்பநாய் அர்ஜூன் பள்ளி மைதானத்தில் சிறிது தூரம் ஓடி விட்டு படுத்துக்கொண்டது.இந்நிலையில்தான் புதுக்கோட்டையில் தங்கியிருந்த ஆறு வடமாநில இளைஞர்கள் மீது திசை திரும்பியது. அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது இறுதியில் அவர்கள் போர்வை வைக்க வந்தவர்கள் என தெரியவந்தது.

இந்நிலையில் திருடர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 3-ம் தேதி மாலை திருவாரூரில் வாகன சோதனையின்போது, திருவாரூர் மடப்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன்(34) என்பவரை மடக்கிப் பிடித்தனர். அவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த திருவாரூர் சீராத்தோப்பைச் சேர்ந்த சுரேஷ்(28) என்பவர் தப்பியோடினார். அப்போது அவர் விட்டுச் சென்ற பெட்டியில் லலிதா ஜூவல்லரி சீல் வைக்கப்பட்ட நகைகள் இருந்தன.
அதைத்தொடர்ந்து, பிடிபட்ட மணிகண்டனிடம் விசாரித்தபோது, சீராத்தோப்பு பகுதியைச் சேர்ந்த பிரபல கொள்ளையனும், சுரேஷின் தாய் மாமனுமான முருகன்(45) என்பவர் தலைமையில்தான் இந்த கொள்ளை நடந்தது தெரியவந்தது. முருகன் மீது ஏற்கெனவே கர்நாடகா, ஆந்திரா, புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் வங்கிகள், நகைக்கடைகள், வீடுகளில் கொள்ளையடித்த வழக்குகள் இருப்பதாகவும் தெரியவந்தது.

முருகனின் திருட்டு விளையாடல்கள்;
திருவாரூரைச் சேர்ந்த முருகன் கவனத்தைத் திருப்பி கொள்ளையடிப்பதில் பலே கில்லாடி. தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களிலும் தன்னுடைய கைவரிசையை கச்சிதமாக காட்டியவர்.
முருகனின் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் இருந்தும் தமிழகத்தில் மட்டும் ஒரு வழக்கு கூட அவர் மேல் இல்லை.முருகன் ஒரு கொள்ளையில் இறங்கிவிட்டால் வெற்றிகரமாக முடித்துவிட்டு தான் வருவாராம்.
கடந்த 2008 ஆம் ஆண்டு தனக்கென ஒரு கொள்ளைக் கும்பலை உருவாக்கி கொண்டு முதல் முதலில் பெங்களூரில் தனது கைவரிசையை காட்டினார். பின் 2011ம் ஆண்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.
பின் தன்னுடைய இருப்பிடத்தை ஹைதராபாத்துக்கு மாற்றிக்கொண்டு சொந்தமாக வீடு வாங்கி தான் ஒரு திரைப்பட இயக்குனர் என அக்கம்பக்கத்தினரிடம் கூறி வந்துள்ளார்.

திரைப்படங்களை விரும்பிப் பார்க்கும் முருகன் தான் ஒரு தயாரிப்பாளர் ஆகவே ஆகவேண்டும் என ஆசை கொண்டிருந்தார். அதேசமயம் நகைக்கடைகள் புகுந்து கொள்ளை அடிப்பது லாவகமாக கொண்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தெலுங்கானா மாநிலத்தில் பாலன் நகரிலும், அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் மக்பூப் நகரிலும் முருகனின் கொள்ளை கும்பல் தொடர் கொள்ளையில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு 2015 ஆம் ஆண்டு முருகன் தலைமையிலான கொள்ளை கும்பலை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கோடியே 72 லட்சம் தங்க நகைகள் பறிமுதல் செய்தனர்.

முருகன் கொள்ளையடிக்க செல்லும் இடங்களில் செல்போன் பயன்படுத்துவது இல்லை , லார்ஜகளில் தங்குவதும் இல்லை காரில் இருந்து கொண்டே தன்னுடைய வேலைகளை கச்சிதமாக முடித்து விடுவார். செல்லும் இடங்களுக்கு காரிலேயே சமைக்கும் பாத்திரங்கள் ஆங்காங்கே நின்று சமைத்து சாப்பிட்டு விட்டு சென்று விடுவார்களாம். பார்ப்பதற்கே பரிதாபமாக நிலையில் காட்சியளிக்கும் முருகன் 4 மாநில போலீசாருக்கே சவால் விடும் அளவிற்கு சிம்ம சொப்பனமாக இருந்துள்ளார்.

முருகன் தான் கொள்ளை அடிக்கும் வீட்டை பல மணிநேரம் கண்காணிப்பாராம். அதில் ஒரு வெற்றுக் காகிதத்தை வைப்பாராம் . அந்த காகிதம் இரவு வரை விழாமல் இருந்தால் வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்டு தன்னுடைய கைவரிசையை காட்ட ஆரமிப்பாராம்.முருகன் தலைமையிலான கொள்ளை கும்பல் அவர் போட்டு கொடுக்கும் மாஸ்டர் ப்ளான் படி தான் கச்சிதமாக வேலையை செய்து முடிப்பார்களாம்.

முருகன் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவராகவும், தான் கொள்ளையடித்த பணத்தில் ஊனமுற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதாகவும், தன்னுடைய ஊர்காரர்களிடம் உதவி செய்வது போல நற்பெயரையும் அப்பகுதியில் வாங்கி வைத்துள்ளார் என்பதும் தெரியவருகிறது.
கொள்ளையடித்த பணத்தில் 50 இலட்சம் மதிப்பில் ஒரு தெலுங்கு சினிமாவையும் தயாரித்துள்ளார்.இதில் தன்னுடைய அக்கா மகன் சுரேஸ்ஸையும் ஒரு கதாபாத்திரத்தில்  நடிக்க வைத்துள்ளார். ஆனால் இறுதிவரை அப்படம் திரைக்கு வரவில்லை.பணப் பற்றாக்குறை காரணமாகத் தான் தெலுங்கானாவில் கைவரிசையை காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு செயல்பட்டு வந்த முருகனுக்கு 100க்கும்  மேற்பட்ட கொள்ளை கும்பலுடன் தொடர்பு இருந்து வந்ததாகவும் திருடும் தங்க நகைகள் போன்றவற்றை விற்பனை செய்வதிலும் புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் தரகராகவும் செயல்பட்டு வந்தார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் முருகனின் சகோதரியும், சுரேஷின் தாயாருமான கனகவல்லி(57), சுரேஷின் நண்பரான மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 4.7 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.முருகன், சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டால் மட்டுமே மீதம் உள்ள நகைகளை பறிமுதல் செய்ய முடியும் என்பதால், இவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களான குணா, ரவி, மாரியப்பன், முரளி உள்ளிட்ட 14 பேரை பிடித்து திருச்சி கே.கே.நக ரில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

திருச்சியில் நடந்த மிகப் பெரிய கொள்ளை சம்பவங்கள்:
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் திருச்சி மலைக்கோட்டை நுழைவாயிலின் இயங்கிவந்த அமர் ஜுவல்லரி என்ற நகைக்கடையில் 40 கிலோ தங்க நகைகளை அள்ளிச் சென்றனர்.திருச்சி லலிதா ஜுவல்லரி யில் சுவரில் துளைபோட்டு அள்ளிச் சென்றது போலவே கடந்த 5 வருடங்களுக்கு முன்னே மிகப்பெரிய அளவில் கொள்ளை நடந்து இருக்கிறது.

இதேபோலவே கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி திருச்சி சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் துளையிட்டு ஐந்து லாக்கரை உடைத்து பல கோடி  பணம் நகை கொள்ளையடிக்கப்பட்டு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

தற்போது;
திருச்சி லலிதா ஜூவல்லரி கடையில் கொள்ளை வழக்கில் தொடர்புடைய திருவாரூர் முருகன் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் போலீஸ் காவிலில் விசாரிக்க திருச்சி மாநகர தனிப்படை போலீசார் பலத்த பாதுகாப்புடன் முருகனை பெங்களூரிலிருந்து திருச்சி அழைத்து வந்து திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2 நீதிபதி திரிவேணி முன் ஆஜர்ப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.லலிதா ஜூவல்லரி நகை கடையில் கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான திருவாரூர் முருகன் கூறியதாவது…
“வாழ்க்கையில் வெற்றி பெறுவேன். நான் திறமையான தயாரிப்பாளர். பெங்களூர் சிறையிலிருந்து திரும்பி வருவேன். சிறையில் நிறைய அனுபவம் கிடைத்திருக்கிறது”.

இன்று லலிதா நகைக்கடை கொள்ளையன் முருகனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்.திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளை வழக்கில் தொடர்புடைய திருவாரூர் முருகன் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் போலீஸ் காவலில் விசாரிக்க திருச்சி மாநகர தனிப்படை போலீசார் பலத்த பாதுகாப்புடன் முருகனை பெங்களூரிலிருந்து திருச்சி அழைத்து வந்து திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2 நீதிபதி திரிவேணி முன் ஆஜர்ப்படுத்தி நேற்றிரவு திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இன்று காலை மீண்டும் திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி திரிவேணி முன்பு முருகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஆஜர்படுத்தினர். நீதிபதி 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.