நீங்க நர்ஸா? உடனே வீட்டை காலி பண்ணுங்க! திருச்சியில் அரங்கேறும் கொடூர கொடுமை!!
கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு செவிலியர்களும், மருத்துவர்களும் தொடர்ந்து பணிபுரிந்து கொண்டே வருகின்றனர். தங்களுடைய பாதுகாப்பை கூட கருத்தில் கொள்ளாமல் அடுத்தவருடைய உயிருக்காக போராடும் இவர்களை கடவுளாக கும்பிட வேண்டிய தருணத்தில், மற்றொருபுறம் இவர்களுக்கு நடக்கும் கொடுமையை திருச்சி விஷன் இணையதளம் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது!
திருச்சியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் வேலை செய்து வருகின்றனர். பலர் பல மாவட்டங்களில் இருந்து வந்து இங்கு வீடுகள் மற்றும் விடுதிகளில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.இவர்கள் நாள்தோறும் படும் கொடுமைகளை வெறும் வாய் வார்த்தையால் சொல்லிவிட முடியாது. அவர்கள் நிலைமை இருந்து பார்த்தால் தான் அதை உணரமுடியும்.
ஒருபுறம் இவர்களை நல்லெண்ணத்தோடு பார்த்தாலும் கொரோனாஅதிகமாக பரவி வருவதால் இவர்கள் மீதான பய உணர்வு மக்களிடையே அதிகமாக உள்ளது.வாடகை வீடுகளில் தங்கி பணிபுரியும் செவிலியர்களை உடனே வீட்டை காலி பண்ண சொல்லும் நிலைமையும் தற்போது திருச்சியில் உருவாகிவருகிறது. மிகுந்த பாதுகாப்புடன் மருத்துவமனைகளில் செயல்பட்டாலும் வீடு திரும்பும்போது இவர்களைப் பார்க்கும் விதமே வேறு மாதிரியாக உள்ளது. வீட்டிற்க்கு வந்தால் குழந்தைகளிடம் கூட பாசமாக கொஞ்சி பேச முடியாமல் தவிப்பதும்,மறுபுறம் ஒரு சிலர் வீட்டை காலி பண்ண சொல்லுவதும் ஒரு சிலர் வேண்டாவெறுப்பாக பேசுவதும் நாள்தோறும் அரங்கேறி வருகிறது.
சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் பல செவிலியர்கள் மனஇறுகத்துடன் தங்களுடைய பணிகளை செய்து வருகின்றனர்.மருத்துவமனைக்கு பணிக்கு செல்லும்போது கூட சீருடையில் சென்றால் மக்கள் ஒருவித கண்ணோட்டத்தில் பார்ப்பதால் சீருடை கூட அணியாமல் அங்கு சென்று மாற்றுவதாக சிலர் வேதனை தெரிவிக்கின்றனர்.
பொது மக்கள் இவர்களை தற்சமயங்களில் பார்க்கும் கண்ணோட்டமே வேறுவிதமாக உள்ளது.ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நாம் சிந்தித்து பார்க்கவேண்டும். இவர்கள் இந்த சூழ்நிலையில் வேலை நிறுத்தம் செய்து விட்டால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் நிலைமை என்பது முழுமையான கேள்விக்குறியான ஒன்றாக மாறிவிடும்.
எனவே இவர்களை பொது மக்கள் போற்றவில்லை என்றாலும் கூட தூற்றாமல் இவர்களை பார்க்க வேண்டும் என்பதே அனைவருடைய கோரிக்கையாக உள்ளது.வீட்டை காலி பண்ண சொல்லுதல் மற்றும் அவர்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான பாதுகாப்புடன் மனநிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்க்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் .