உயிர்களை பலி வாங்கும் தேசிய நெடுஞ்சாலை மனித உயிர்கள் காப்பாற்றபடுமா?

உயிர்களை பலி வாங்கும் தேசிய நெடுஞ்சாலை மனித உயிர்கள் காப்பாற்றபடுமா?

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை திருச்சி பால்பண்ணை முதல் துவாக்குடி வரை 14.5 கிலோ மீட்டர்கள் சர்வீஸ் சாலை அமைக்கப்படாமல் 15 ஆண்டுகளுக்கு முன்பாக நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது.

 அதிலிருந்து இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த சாலையில் பலியாகி உள்ளார்கள். 3000க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. ஊனமுற்றோர் பல ஆயிரம். இந்த சாலையில் சர்வீஸ் சாலை அமைக்கப்படாததால் நாள்தோறும் விபத்துக்கள் நடந்த வண்ணம் இருக்கிறது. துவாக்குடி முதல் திருச்சி பால்பண்ணை வரை சுங்கவரி வசூலிக்கப்படும் சாலையாகும். இந்த சாலை நான்கு வழிச்சாலையாக இருந்தாலும் முறையாக இது பராமரிக்கப்படுவது இல்லை. இந்த சாலையில் வழி நெடுகிலும் பல கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், குடியிருப்புகள் என தொடர்ந்து இருக்கின்றன. இந்தச் சாலையில் தான் தேசிய தொழில்நுட்பக் கல்லூரி, பாய்லர் தொழிற்சாலை, ஓ. எப்.டி. துப்பாக்கி தொழிற்சாலை போன்ற தொழிற்சாலைகளும் பல சுற்றுலாத் தலங்களான கல்லணை,

 எறம்பீஸ்வரர் கோவில், திரு நெடுங்களநாதர் ஆலயம் போன்ற ஆலயங்களும் பல வணிக வளாகங்களும் இருப்பதால் பல ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சாலையை பயன்படுத்துகிறார்கள். இந்தச் சாலை வழியாகத்தான் காவிரி டெல்டாவிற்கு தஞ்சாவூர் கும்பகோணம் மயிலாடுதுறை போன்ற ஊர்களுக்கும் வேளாங்கண்ணி நாகூர் போன்ற மத வழிபாட்டுத் தலங்களுக்கும் தினந்தோறும் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகிறார்கள். இந்தச் சாலையில் தொடர் விபத்துக்கள் நடந்த வண்ணம் இருந்தாலும் இந்தப் பகுதியில் பல அரசியல் கட்சிகள் சமூக நல அமைப்புகள் சர்வீஸ் சாலை மீட்பு கூட்டமைப்பினர் என பலரும் பலவித போராட்டங்களை நடத்திய பின்பு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும் இங்கு சர்வீஸ் சாலை இதுவரை அமைக்கப்படவில்லை. அது ஒரு புறம் இருந்தாலும் இந்த 14.5 கிலோமீட்டர் தூரம் துவாக்குடி முதல் திருச்சி பால்பண்ணை வரை சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. கடந்த பல ஆண்டுகளாக இந்தச் சாலை குண்டும் குழியுமாக படத்தில் உள்ளவாறு பராமரிப்பு இல்லாமல் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை என்றால் ஆண்டுக்கு ஒரு முறை பராமரிப்பு செய்யப்பட வேண்டும். ஆனால் இவை பராமரிப்பின்றி பல ஆண்டுகளாக இருக்கின்றது. ஆங்காங்கே பேட்ச் ஒர்க் ஓட்டு போடுதல் மட்டும் செய்யப்பட்டுள்ளது. குண்டும் குழியுமாக இருப்பதால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். தொடர் விபத்துக்கள் நடக்கின்றன. இந்த சாலையை முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதற்கு என்ன காரணம்? இங்கே மாவட்ட ஆட்சித் தலைவர் இருக்கிறார்கள். இந்த சாலைக்கு என்று தேசிய நெடுஞ்சாலை அமைப்பகம் தஞ்சையில் இருக்கிறது. இந்த சாலையில் அனைத்து அரசியல்வாதிகளும் பயணிக்கிறார்கள். இந்த சாலை சுங்கவரிச்சாலையாக இருந்தாலும் அவற்றை முறையாக பராமரிக்காததால் விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளது. ஆகவே இந்தச் சாலையை இனியாவது உரிய அதிகாரிகள் கண்ணுற்று இவற்றை மற்ற தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்படுவது போல் இந்த சாலையையும் பராமரித்தால் விபத்துக்கள் தவிர்க்கப்படும். உரிய அதிகாரிகள் இவற்றை உடனடியாக கவனித்து பல ஆயிரக்கணக்கான மக்களின், பயனாளிகளின், நெடுஞ்சாலை பயணிப்போர்களின் உயிர்களைப் பாதுகாத்திடுமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision