தேவதாசிகளின் சதிராட்டம் : ஒரு கலையின் கடைசி வாரிசு - பத்மஸ்ரீ முத்து கண்ணம்மாள்
சதிராட்டம் என்பது பாரம்பரியமிக்க ஒரு ஆட்டக்கலை என்பது முத்துக்கண்ணம்மாவை சந்தித்த பின்தான் நமக்கு தெரிந்தது. தேவதாசி முறையைப் பற்றி நாம் அறிந்திருக்கக் கூடும். அது பற்றி படித்திருக்கவும் வாய்ப்பு உண்டு. தேவதாசி முறைக்கு முடிவு கட்டி 70 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. அவர்களால் உயிரோட்டமாக அரங்கேற்றப்பட்டு வந்த பாரம்பரிய ஆட்டக் கலையான சதிர் ஆட்டமும் முடிவுக்கு வந்தது பெரும் சோகம். அதன் கடைசி வாரிசாக எஞ்சி நிற்பவர் தான் விராலிமலை முத்துக்கண்ணமா.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இத்தகைய முறை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுப்பிரமணியர் கோயிலில் இருந்தது. இறுதியாக தெரியவரும் புள்ளிவிவரப்படி, புதுக்கோட்டை சமஸ்தான நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 32 தேவதாசிகள் பணியாற்றியுள்ளனர். இவர்களில், தற்போது 82 வயதான நிலையில் உள்ள முத்துக்கண்ணம்மா மட்டும் தான் எஞ்சியுள்ளார். வயது தளர்ந்திருந்தாலும் குரல், நடன அசைவுகளில் இளமையை நினைவூட்டுகிறார். தேவதாசிகளின் முக்கியப்பணி நடனமாடுவது. அந்த ஆட்டக் கலையின் பெயர்தான் சதிர் ஆட்டம். இந்த நடனம் இன்னும் இளமைத் துடிப்போடு இருக்கிறது முத்துக்கண்ணம்மாவிடம். கோயிலில் தினமும் நடைபெறும் வழிபாட்டின்போது முருகனைப் பற்றி பாடல் பாடுவதும் சுவாமி வீதியுலாவின்போது நடனமாடுவதுமே இவரது பிரதானப் பணியாக இருந்துள்ளது. அதோடு பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், மாசி மகம், தைப்பூசம் போன்ற திருவிழாக் காலங்களில் கும்மி, கோலாட்டம் என சதிர் ஆட்டம் களைகட்டும்.
தேவதாசி முறை ஒழிப்புப் பிறகு பாரம்பரிய கலையாக இருந்த சதிர் ஆட்டம் ஆட்டம் கண்டது. காலப்போக்கில் தேவதாசிகளாக இருந்தவர்கள் மறைய, அவர்களால் நிழ்த்தப்பட்ட கலையும் மறைந்தது. தேவதாசி பாரம்பரியத்தின் கடைசி வாரிசாக எஞ்சி நிற்கிறார் முத்துக்கண்ணம்மா. இவருக்குத் தெரிந்த சதிர் ஆட்டக் கலை இவரோடு முடிந்துபோகும் நிலையில்தான் இருக்கிறது. வயது 82. ஆனால் நடுக்கமில்லாத குரலோடு, தெளிவாகப் பேசுகிறார் முத்துக்கண்ணம்மாள். ''சந்தோசமா இருக்கு. பிறந்து வளந்தது எல்லாம் விராலிமலை தான். தலைமுறை தலைமுறையா சதிர் ஆடற குடும்பம் எங்களோடது. நானு 7-வது தலைமுறை. அய்யா (அப்பா) ராமச்சந்திர நட்டுவனார் அந்தக் காலத்திலேயே பெரிய ஆளு. கடைசியா இருந்த 32 தேவதாசிகளுக்கும் குரு. அவரோடதான் கோயிலுக்குப் போவோம் வருவோம். ரொம்ப பொறுமையா இருப்பாரு. சதிராட்டம், விராலிமலை குறவஞ்சியை சொல்லிக் குடுத்தாரு. வர்ணம், கும்மி, கோலாட்டமும் தெரியும்.
இளமையிலேயே அனைத்தையும் ஆறு மாதங்களில் கற்ற பின்னரே நான் அரங்கேற்றப்பட்டேன். எனக்கு 30 வயதாகும் வரை கோயில் விழாக்களில் நடனமாடும் வழக்கம் இருந்தது. விராலிமலை சுப்பிரமணியர் கோயில் திருவிழாவின்போது எங்களின் ஆடலும், பாடலுமே ஊர்மக்களைச் சுண்டி இழுத்து கோயிலை நோக்கி வரவழைக்கும். பாடலில் உள்ள சொல்லாடலுக்கு ஏற்ப, தன் உடலையே மாற்றக்கூடிய வல்லமைதான் இந்த கலையின் புலமை. தினமும் காலை 9 மணிக்கு விராலிமலை சுப்பிரமணியசாமி கோயிலுக்குப் போவோம். மலைக்குப் போக 200, வர 200ன்னு 400 படிக(ள்) இருக்கும். ஆனா அப்போ அலுப்பே தெரியாது. புதுக்கோட்டை மகாராஜா கோயிலுக்குப் பச்சரிசி குடுப்பாக. அதை இடிச்சு, அரைச்சு மாவாக்குவோம். அதை பித்தளைத் தட்டுல கொட்டி, 32 பேரும் தனித்தனியா 32 தட்டுல 'ஓம் சரவண பவ'ன்னு எழுதி வைப்போம்.
சாயந்தரமும் கோயிலுக்குப் போவோம். 6 மணிக்கு சாமிக்கு தீபாராதனை காட்டும்போது அப்பா திருப்பம் பாடுவாக. எல்லாம் முடிச்சிட்டு, 8 மணிக்கு ஏகாந்தம் ஓதி சாமி கோயில சுத்தி வரும். பள்ளியறைல சாமியத் தூங்க வைச்சுட்டுத்தான் கீழ இறங்குவோம். கோயில்ல கொலு காலத்துல்ல மட்டுந்தான் சதிராடணும். பிறகு திருவிழாவுக்குதே சதிர் எல்லாம். இப்படித்தான் சாமிய சேவிப்போம்'' என்று பழைய நினைவுகளுக்குள் மூழ்குகிறார். விராலிமலை குறவஞ்சி என்ற நடன நிகழ்வு அப்போது மவுசு குறையாத ஒன்றாக இருந்தது. 1947-க்குப் பிறகு தேவதாசி முறை ஒழிக்கப்பட்டதுடன் கோயிலுக்குச் சேவகம் செய்து வந்தவர்களும் படிப்படியாக இறந்துவிட்டனர். தற்போது, நான் மட்டுமே எஞ்சியுள்ளேன்.
ஒலிபெருக்கியில் ஒலிக்கும் பாடலுக்கு ஏற்ப ஆடக்கூடிய பரத நாட்டியம் தமிழகமெங்கும் முக்கிய கலாச்சார நடனமாக ஆடப்பட்டு வரும் நிலையில், இதற்கு முந்தைய கலையான பாடலும் - ஆடலும் நாமேயாக இருக்கக் கூடிய, சதிர் நடனம் அழிவின் விளிம்பில் இருக்கிறது. விடுதலைக்கு முன்பாக, ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் விராலிமலை சுப்பிரமணியசாமி (முருகர்) கோயிலுக்கு, பொட்டுக் கட்டிவிடப்பட்ட 32 சிறுமிகளில் முத்துக்கண்ணம்மாளும் ஒருவர். இப்போது 32 பேரில் தேவரடியார் மரபின் கடைசிப் பெண்ணாக உள்ளார். சதிர் ஆட்டத்தின் நீட்சியாக இருப்பதும் தான் மட்டுமே என்கிறார் முத்துக்கண்ணம்மாள்.
சதிர் குறித்தும் பேசுகிறார். ''சதிர்னு சொன்னா நெறைய பேருக்குப் புரியறது இல்ல. ஆடறவங்களுக்கு மட்டுந்தே தெரியும். சதிர் ஆடறவங்க சொந்தமாவே பாடிக்கிட்டே, ஆடுவோம். ஆனா, பரதநாட்டியத்துல வேற ஒரு நட்டுவனார் பாட, அவங்க ஆடுவாங்க. சாமி உலா வருதுன்னா நாங்க வீதில நின்னு சதிரு ஆடுவோம். ஆனா, பரதநாட்டியத்த மேடைல மட்டும்தான் ஆடுவாக. வீதில ஆட மாட்டாக'' என்று விளக்குபவர், ''கோயில்ல இருந்த காலத்துல எனக்கு எந்த பாலியல் ரீதியான சங்கடமும் வந்ததில்ல. கவுரவமாத்தே இருந்துருக்கோம். யாரும் எதுவுஞ் சொன்னதுமில்ல. பேசுனதுமில்ல'' என்கிறார். தேவரடியராக பொட்டுக்கட்டி விடப்பட்டதால், நித்திய சுமங்கலிப் பட்டம் பெற்ற முத்துக்கண்ணம்மாள் தனது முதல் கணவரான முருகப் பெருமானையே வரித்துள்ளார். திருமணம் தனியாக நடைபெறாது என்பதால் பிடித்த இணையருடன் வாழ்வது தேவரடியார்களின் வழக்கம். தேவரடியார்கள் ஒழிப்பு சட்டம் தேவரடியார்களுக்குத் திருமணம் செய்யும் உரிமையைத் தந்தது. இந்து கோயில்களுக்குப் பெண்களை நேர்ந்து விடுவதைச் சட்டத்துக்குப் புறம்பானதாக அறிவித்தது.
தேவரடியார் முறை அடியோடு ஒழிக்கப்பட்ட பிறகு, தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா எனப் பிற மாநிலங்களுக்கும் சென்று சதிர் ஆட்டத்தை ஆடியிருக்கிறார் முத்துக்கண்ணம்மாள். இந்தக் கலையை அடுத்தடுத்த சந்ததிகளுக்குக் கடத்த வேண்டும் என்பதே முத்துக்கண்ணம்மாளின் ஆவலாய் இருக்கிறது. ''சதிராட்டக் கலையை முடிஞ்ச வரை காப்பாத்தி, நல்ல பேரு வாங்கி வச்சிருக்கேன். பத்மஸ்ரீ பட்டமும் வாங்கறோம். அறிவிப்பு வந்ததும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வந்து பார்த்தாரு. ஊர்க்காரங்க, கட்சிக்காரங்க வர்றாங்க. நிறைய பேரு வாழ்த்து சொல்றாங்க.
எங்க பேத்திகளும் கத்துக்கிட்டு ஆடறோம்னு சொல்லி இருக்குதுக. புதுசா யாராவது கத்துக்க ஆசைப்பட்டாலும் சொல்லிக் குடுக்கத் தயாரா இருக்கேன். இந்தக் கலை என்னோட அழிஞ்சுடக் கூடாது'' என்கிறார் முத்துக்கண்ணம்மாள். கலை வளர்த்த தமிழ்நாட்டில் முத்துக்கண்ணம்மாவின் உயிர் மூச்சில், ஊசலாடிக் கொண்டிருக்கிறது சதிராட்டம் எனும் பாரம்பரியக் கலை. தேவதாசி முறை ஒழிக்கப்படும்போது, அவர்களால் நிகழ்த்தப்பட்ட கலைகளை அரசோ, அமைப்புகளோ பாதுகாத்து ஆவணப்படுத்தி வளர்த்திருக்க வேண்டும். 7 தலை முறைகளாக இந்த மண்ணில் வேர் பிடித்து நின்றிருந்த சதிராட்டக் கலை, தற்போது ஒற்றைத் தலையோடு முடிந்துபோக இருப்பதில் யாருக்குத்தான் சம்மதம்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn