திருச்சி வரும் முதல்வர் ஸ்டாலின்-பிரம்மாண்டம் காட்டும் 2 அமைச்சர்கள்

திருச்சி வரும் முதல்வர் ஸ்டாலின்-பிரம்மாண்டம் காட்டும் 2 அமைச்சர்கள்

திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் நாளை (29.12.2022) நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சி வருகை தருகிறார். அமைச்சர்கள் நேருவும், அன்பில் மகேஷம் மிக பிரம்மாண்டமாக விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் மாவட்ட நிர்வாகத்தினர் முதல்வர் பங்கேற்கும் விழாவுக்கான ஏற்பாடுகளை முழு வீச்சில் செய்து வருகின்றனர்.

முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த முதல்வர், மருத்துவர்கள் வழங்கிய அறிவுரையை ஏற்று, கடந்த ஓரிரு மாதங்களாக வெளியூர் நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்தார், இப்போது மீண்டும் பரபரப்பாக வெளியூர்களுக்கு விசிட் அடித்து வருகிறார். தமிழகம் முழுவதும் மீண்டும் சுற்றுப்பயணம் செல்லத் தொடங்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.  

விழாவில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு நாளை மாலை செல்லும் முதல்வர், அங்கு லட்சக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அமைச்சர்கள் கே.என்.நேருவும், அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் முன்னேற்பாடுகளை முழு வீச்சில் கவனித்து வருகின்றனர். அமைச்சர்கள் கே.என்.நேருவும், அன்பில் மகேஸும் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வரும் பணிகளை அவ்வப்போது மாவட்ட ஆட்சியரிடம் கேட்டு அறிந்து கொள்கின்றனர்.

அமைச்சர்களுக்கு விழா குறித்த முன்னேற்பாடுகளின் நிலை குறித்து விரிவாக எடுத்துரைத்து வருகின்றனர் மாவட்ட ஆட்சியர் பிரதீப் மற்றும் திட்ட இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் . மழை பெய்தாலும் பயனாளிகள் நனையாத வண்ணம் பந்தல் அமைக்கப்பட்டு வருகின்றன. அமைச்சர் செந்தில்பாலாஜி காட்டும் பிரம்மாண்டத்தை விட திருச்சியில் ஒரு படி மேலாக பிரம்மாண்டம் காட்டப்படும் எனத் தெரிகிறது.

இந்த அரசு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் என்ற முறையில் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் 4வது மாவட்டமாக திருச்சிக்கு அவர் வருகை தருகிறார் எனக் கூறப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO