கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்பணிகள் சார்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு தலைமையில் இன்று (19.09.2021) நடைபெற்றது. இவ்விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று இவ்விழாவினை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மங்கலப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரகத்தில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் வருவாய்த்துறை சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா, வெளிநாடுவாழ் இந்தியர் இறப்பிற்கான நிவாரண உதவி, சத்துணவுத்திட்டம் சார்பில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் விலையில்லா தையல் இயந்திரம் மற்றும் சலவைப் பெட்டிகள், வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் நெல் நடவு இயந்திரங்கள் மற்றும் நெல் அறுவடை இயந்திரங்கள், வேளாண்மைத் துறை சார்பில் கைத்தெளிப்பான்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் விலையில்லா இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், சிறப்பு சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.
மேலும் குழந்தைகள் பாதுகாப்புத்துறை சார்பில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண நிதி மற்றும் சமூக நலத்துறை சார்பில் முதலமைச்சரின் பெண்குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சேமிப்புப் பத்திரம் என மொத்தம் 48 பயனாளிகளுக்கு ரூபாய் 98 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
முன்னதாக திருச்சிராப்பள்ளி செயிண்ட் ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன்
மேல்நிலைப்பள்ளியில் இன்று (19.09.2021) நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டார்.
இந்நிகழ்வுகளில், சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்திரபாண்டியன் (இலால்குடி), எஸ்.ஸ்டாலின் குமார் (துறையூர்), எம்.பழனியாண்டி (ஸ்ரீரங்கம்), எஸ்.கதிரவன் (மணச்சநல்லூர்), ப.அப்துல் சமது (மணப்பாறை), மாநகராட்சி ஆணையா் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான், வருவாய் கோட்டாட்சியர் என்.விஸ்வநாதன், மாவட்ட குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் தி.புவனேஸ்வரி, இணை இயக்குநர் (வேளாண்மை) முருகேசன், வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளர் எஸ்.குமாரகணேஷ், இணை இயக்குநர் (நலப்பணிகள்) டாக்டர் சு.லெட்சுமி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் வனிதா.
சமூக பாதுகாப்புத்திட்டம் தனித்துணை ஆட்சியர் சி.அம்பிகாவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மணியன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சந்திரமோகன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் அனிதா, மாவட்ட சமூக நல அலுவலர் அ.தமீமுன்னிசா, முன்னாள் துணை மேயர் மு.அன்பழகன், மாவட்டப் பிரமுகர் வைரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn