திருச்சியில் கட்டடக்கழிவு மறுசுழற்சி ஆலை - டெண்டர் கோரிய மாநகராட்சி

திருச்சியில் கட்டடக்கழிவு மறுசுழற்சி ஆலை - டெண்டர் கோரிய  மாநகராட்சி

கட்டடக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் ஆலை நிறுவுவதற்காக திருச்சி மாநகராட்சி டெண்டர் வெளியிட்டுள்ளது. அரியமங்கலத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்த ஆலையில் திருச்சி மாநகரில் சேரும் கட்டடக்கழிவுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு தரையில் பதிக்கும் டைல்ஸ்களும், பிளாக்குகளும் தயாரித்து அவற்றைச் சந்தைப்படுத்தலாம் எனத் திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கெனவே 2000ஆவது ஆண்டில் இதேபோல் ஒரு டெண்டர் விடப்பட்டது. நிறுவனங்கள் எதுவும் உரிய ஆர்வம் காட்டாததால் இத்திட்டம் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கட்டடக்கழிவுகளைக் கையாளுவது மாநகராட்சிக்குப் பெரும் பிரச்னையாக இருப்பதால் இத்திட்டத்தில் சில மாற்றங்கள் செய்து மறு டெண்டர் விடப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு நாளைக்கு 100 டன் கழிவுகளைக் கையாள வேண்டும் என்பது 25 டன்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் நகர், கோணக்கரை, ஜி கார்னர், பஞ்சப்பூர் ஆகிய இடங்கள் கட்டடக் கழிவுகளைச் சேகரிக்கும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இத்திட்டம் தொடர்பான நிறுவனங்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து வருவதாகவும், இம்முறை டெண்டர் எடுப்பதில் நிறுவனங்கள் ஆர்வம் காட்டும் என நம்புவதாகவும் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision