ஊழல் குறித்து புகார் - எப்படி, எங்கே அளிப்பது??

ஊழல் குறித்து புகார் - எப்படி, எங்கே அளிப்பது??

ஊழலுக்கு எதிராக இயங்கும் தேசிய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் தென்னிந்திய தலைவரான திருச்சி காட்டூரை சேர்ந்த சக்தி பிரசாத், ஊழல் குறித்து எவ்வாறு புகாரளிப்பது என்பதை நம்மிடம் விளக்குகிறார். தேசிய ஊழல் எதிர்ப்பு இயக்கம் 1997 ஆம் ஆண்டு டாக்டர் டி.ஆர். ராஜாமோகன் அவர்களால் நிறுவப்பட்டது மற்றும் அவர் தேசிய மனித உரிமைகள் இயக்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

இந்தியாவில் ஊழலைப் புகாரளிப்பது ஊழலின் தன்மை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரத்தைப் பொறுத்து பல முறைகளின் மூலம் செய்யப்படுகிறது. அதனை அறிந்து கொள்வதன் மூலம் ஊழலுக்கு எதிராக நாம் எடுத்து வைக்கும் முதல் அடியை தெளிவாக மேற்கொள்ளலாம். ஊழல் குறித்து புகாரளிக்கும் முன்பு ஊழலின் வகையை தெரிந்து கொள்ளுதல் அவசியம்.

நேரிடையாக லஞ்சம் வழங்குதல், பொது நிதியை தவறாகப் பயன்படுத்துதல், பொது வளங்களை தவறாகப் பயன்படுத்துதல், பொது நலனை பாதிக்கும் மோசடி மற்றும் லஞ்சமாக பெறாமல் வேறு ஏதேனும் மூலம் பெறும் நடைமுறைகள் என பல முறைகள் உள்ளது. இப்படி எந்த முறையில் ஊழல் நடந்தாலும் நாம் புகாரளிப்பதற்கு முன்பு ஆதாரங்களை சேகரிப்பது மிக முக்கியமான ஒன்றாகும் நீங்கள் புகாரளிக்க இருக்கும் ஊழலை குறித்த அனைத்து ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை சேகரிக்க வேண்டும்.

மேலும் ஊழல் சம்பவம் தொடர்பான முக்கியமான தேதிகள், அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் அவர்களின் பணி குறிப்பிட்ட விவரங்கள் உங்களிடம் இருப்பதை உறுதிசெய்யவும். ஆதாரங்கள் சேகரித்த பின் அந்த ஊழல் செய்த அதிகாரி சம்பந்தப்பட்ட மத்திய அரசு துறைகள் அல்லது மாநில அரசு துறை அல்லது அந்தந்த அமைச்சகத்தை தொடர்பு கொள்ளவும். இல்லையெனில் மாநில விஜிலென்ஸ் கமிஷனை அணுகலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் ஊழல் வழக்குகளைக் கையாள்வதற்கு அதன் சொந்த விஜிலென்ஸ் கமிஷன் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து இங்கெல்லாம் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தோன்றும் பட்சத்தில் மத்திய புலனாய்வு அமைப்பை (சிபிஐ) அணுகலாம். கடுமையான ஊழல் வழக்குகளுக்கு மட்டுமல்லாது, குறிப்பாக அரசு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு இவர்களிடம் புகாரளிக்கலாம். இதுமட்டும் இல்லாமல் ஊழல் தடுப்பு பணியகம் (ஏசிபி) என உள்ளூர் ஊழல் பிரச்சினைகளை கையாளும் அமைப்பு பல மாநிலங்களில் உள்ளது. இதன் மூலமும் நாம் புகாரளிக்கலாம்.

நேரிடையாக இல்லாமல் இணையதளம் மூலமும் நாம் புகாரை பதிவு செய்யலாம். மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (CVC) போன்ற இணையதளங்கள் ஆன்லைன் புகார்களை அனுமதிக்கின்றன. இவற்றின் ஆன்லைன் பிளாட்ஃபார்ம்-இ-கவர்னன்ஸ் போர்ட்டலைப் பயன்படுத்தவும் இதுபோன்று பல்வேறு மாநில அரசுகள் பொதுமக்கள் குறைகளைப் புகாரளிக்க ஆன்லைன் தளங்களைக் கொண்டுள்ளன.

தனியாக ஊழலுக்கு எதிராக புகாரளிக்க சிக்கல் இருக்கும் பட்சத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இனைந்து புகாரளிக்கலாம், பல அரசு சாரா நிறுவனங்கள் ஊழலுக்கு எதிரான முயற்சிகளில் ஈடுபட்டு புகாரளிக்க உதவி அல்லது வழிகாட்டுதலை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது..

மேற்கூறிய முறைகளில் ஊழலுக்கு எதிராக வழக்கு பதிந்த பின்பு புகாரை தொடர்ந்து ஃபாலோ அப் செய்வது முக்கியம். புகாரைச் சமர்ப்பித்த பிறகு, உங்கள் வழக்கின் முன்னேற்றத்தைச் சரிபார்க்க பின்தொடர்வதை உறுதிசெய்வது முக்கியம். அதேபோல நீங்கள் புகாரளித்தவர்கள் உங்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டால் அல்லது உங்கள் புகார் கவனிக்கப்படாமல் இருந்தால், சட்ட ஆலோசனையைப் பெறுவதிலும் தயக்கம் வேண்டாம்.

இதனை தொடர்ந்து கடைசி முயற்சியாக, நீங்கள் அளித்த புகாரின் மேல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறினால், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஊடகங்களுக்குப் பிரச்சினையைக் கொண்டுவருவதைக் கருத்தில் கொள்ளுங்கள். இணையதள முகவரிகள் மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (CVC) இணையதளம் https://cvc.gov.in பொதுமக்கள் குறைதீர்ப்பு போர்டல் http://pgportal.gov.in

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision