அரசியலமைப்புச் சட்டம் குறித்த விவாதம் - திருச்சி எம்பி உரை
நாடாளுமன்றத்தில் நடந்த அரசியலமைப்புச் சட்டம் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ உரையாற்றினார். அப்போது, இது கோட்சேவின் மண்ணோ, சாவர்கரின் மண்ணோ அல்ல, இந்தியா காந்தியின் மண் என்றும், இந்தியாவை வழி நடத்த வேண்டியது பாபாசாகேப் அம்பேத்கர் வகுத்தளித்த அரசியலமைப்புச் சட்டமாக இருக்கவேண்டுமே தவிர கோல்வால்கரின் “Bunch of Thoughts” என்ற நூலோ, சாவர்கரின் “Hindutva” என்ற நூலோ அல்ல என்றும் ஆணித்தனமாக எடுத்துரைத்தார்.
அவர் உரையின் முழுவிபரம் பின்வருமாறு.......பேச வாய்ப்பளித்தமைக்கு நன்றி ஐயா, அரசியலமைப்புச் சட்டம் ஒரு ஆவணம் மட்டுமல்ல, அது நம் குடியரசின் இதயமும் ஆன்மாவும் ஆகும். இன்று, நான் மிகுந்த வருத்தத்துடனும், கவலையுடனும், வேதனையுடனும் பேசுகிறேன். இந்த அரசு தொடர்ந்து எவ்வாறு அரசியலமைப்பை புல்டோசர் கொண்டு இடதும் வலதுமாக அழித்துக் கொண்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தமிழ்நாட்டிலிருந்து பஞ்சாப் வரை, மகாராஷ்டிராவிலிருந்து மணிப்பூர் வரை, சம்பலிலிருந்து அஜ்மீர் தர்கா வரை, விவசாயிகள் போராட்டங்களிலிருந்து தேர்தல் பத்திரங்கள் வரை, பசு பாதுகாப்புக் கும்பல் வன்முறைகளிலிருந்து புல்டோசர் நீதி வரை, கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு சாதகமான ஆட்சியிலிருந்து பாஜக ஆட்சி இல்லாத மாநில அரசுகளுக்கு இடையூறு செய்யும் ஆளுநர்கள் வரை, நாட்டின் ஜனநாயகத்தையும், சமூக நீதியையும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், மதச்சார்பின்மையையும் ஒழித்துக் கட்டிட ஒன்றிய அரசின் திட்டமிட்ட முயற்சியாகும்.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சமூகநீதி ஆகிய நமது நாட்டு அரசியலமைப்பின் அடித்தளத்தையே அசைக்கும் வலதுசாரி சித்தாந்தங்களின் எழுச்சியே இன்றைக்கும் எதிர்காலத்திற்குமாக இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். நமது அரசியலமைப்பின் மேற்கூறிய நான்கு அடிப்படை தன்மைகள் மறுக்கப்பட்டால் இந்த நாட்டின் குடிமக்களுக்கு எதிர்காலம் என்பதே இருக்காது. ஒன்றிய அரசு ஒரே இந்தியா, சிறந்த இந்தியா பற்றி பேசுகிறது. நாமும் ஒன்றுபட்ட, வலிமையான இந்தியாவை விரும்புகிறோம். ஆனால், ஒன்றிய அரசு உண்மையில் ஒரு வலுவான இந்தியாவை உருவாக்கப் பணியாற்றுகிறதா, அல்லது வெற்று முழக்கத்தை மட்டுமே கூறுகிறதா என்ற கேள்வி எழுகிறது.
ஏனெனில், சமீபகாலங்களில் உண்மைக்கு புறம்பான, நச்சு நிறைந்த, வலதுசாரி சித்தாந்தங்கள் பலவற்றை கேட்கமுடிகிறது. இந்த ஒன்றிய அரசு பின்பற்றும் சங்பரிவார் சித்தாந்தத்தின் படி, ஒரே நாடு என்பது ஒரே இந்துத்துவா நாடு, ஒரே மொழி என்பது இந்தி மொழி மற்றும் ஒரே கலாச்சாரம் என்பது சங்பரிவார் கலாச்சாரத்தையே குறிக்கிறது. இதில் பன்முகத்தன்மைக்கு இடமில்லை, மற்ற மதங்களுக்கு இடமில்லை, மற்றும் அற்புதமான திராவிட கலாச்சாரம் மற்றும் பிற பிராந்திய கலாச்சாரங்களுக்கும் இடமில்லை.
அதுமட்டுமல்ல, நமது இந்தியாவின் உண்மையான அடையாளமும், பெருமையுமான, “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற நம் நாட்டின் வலுவான அடிப்படையை இந்துத்துவ கொள்கை நிச்சயம் ஏற்காது. கடந்த 77 ஆண்டுகளுக்கு முன்பு, நமது இந்தியக் குடியரசின் நிறுவனத் தந்தைகளான மகாத்மா காந்தி, பண்டிட் நேரு, பாபாசாகேப் அம்பேத்கர், பட்டேல் மற்றும் பலர் புதிய இந்தியாவை மதவெறி, சாதிவெறி மற்றும் எதேச்சதிகாரத்தால் அழிக்கப்படாமல் பாதுகாக்கும் புதிய பாதையை அமைத்தனர். ஆனால், 2002 குஜராத் கோத்ரா கலவரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கிய மணிப்பூர் மோதல் வரை ஒன்றிய அரசு மதவெறி, சாதிவெறி மற்றும் எதேச்சதிகாரத்தைக் கொண்டு மக்களைப் பிளவுபடுத்தும் விதைகளை விதைத்து வருகிறது.
அரசியலமைப்புச் சட்டம் சமத்துவத்தை உறுதி செய்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்று, பெருமுதலாளிகளுக்கு சாதகமான ஆட்சியினால் சமத்துவம் உடைபடுகிறது. கடந்த 30 ஆண்டுகளில், நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 25 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 200 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி வளர்ந்துள்ளது. ஆனால், இந்த பொருளாதார வளர்ச்சி இந்திய சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் சென்றடைந்துள்ளதா என்றால் இல்லை என்று நான் வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.
நமது மக்கள் தொகையில் 50 விழுக்காடு உள்ள தொழிலாளர் வர்க்கம், நாட்டின் மொத்த செல்வத்தில் 3 விழுக்காட்டிற்கு குறைவாகவும், அதே சமயம், 5 விழுக்காடே உள்ள செல்வந்தர்கள் நாட்டின் மொத்த செல்வத்தின் 60 விழுக்காட்டை வைத்துள்ளனர். ஆகவே, இதை தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், இந்த அரசின் பொருளாதாரக் கொள்கையினால் கார்ப்பரேட் பெருநிறுவனங்கள் மட்டுமே பயனை அனுபவித்துக் கொண்டுள்ளது. ஆனால், விவசாயிகள், தொழிலாளிகள் மற்றும் சாதாரண ஏழை எளிய அடித்தட்டு மக்கள் அதிகமான கடன்களில் சிக்கி, துன்பங்களின் சுமையுடன் மட்டுமே வாழ்கிறார்கள்.
விவசாயக் கடன்களால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதையும், கல்விக் கடனால் பாதிக்கப்பட்ட ஏழை மாணவர்களின் பெற்றோர்கள் தற்கொலை செய்துகொள்வதையும், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத ஏழை எளிய அடித்தட்டு தொழிலாளர் வர்க்கத்தை வங்கிகள் எவ்வாறு துன்புறுத்துகிறது என்பதையும் நாம் அன்றாடம் காண்கிறோம். ஆனால், அதே வங்கிகள் 14 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக பெருமுதலாளிகளுக்கு வழங்கிய கார்ப்பரேட் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் மதிப்புவாய்ந்த கொள்கைகளான சமத்துவம் மற்றும் சமூகநீதியை ஒன்றிய அரசு கைவிட்டுவிட்டதை இது தெளிவாக நிரூபிக்கிறது.
ஒரு சிறந்த, ஒன்றுபட்ட இந்தியாவிற்கு, நாம் பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தையே பின்பற்ற வேண்டும்; மாறாக, கோல்வால்கரின் “பன்ச் ஆஃப் தாட்ஸ்” (Bunch of Thoughts) என்ற நூலையோ, சாவர்கரின் “இந்துத்துவா” (Hindutva) என்ற நூலையோ அல்ல என்பதை நாம் நினைவில் ஏந்த வேண்டும். இந்தியா என்பது கோட்சேவின் மண்ணோ, சாவர்கரின் மண்ணோ அல்ல என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இது மகாத்மாவின் மண், இங்கு நம்பிக்கை, அவநம்பிக்கையை வெல்லும்; அன்பு, வெறுப்பை வெல்லும்; சகோதரத்துவம், பகைமையை வெல்லும்; சமத்துவம், ஏற்றத்தாழ்வை வெல்லும்; சுதந்திரம், அடிமைத்தனத்தை வெல்லும்.
அற்ப அரசியலை கடந்து நின்று, மிகவும் தாமதமாவதற்கு முன், இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அதன் அறநெறிகளின் விழுமியங்களை ஓங்கிப்பிடிப்போம், அவற்றை உறுதியோடு நிலைநிறுத்துவோம்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision