திருக்கோவில் நிலங்களுக்கு தற்போது பட்டா வழங்கும் பேச்சுக்கே இடமில்லை - திருச்சியில் அமைச்சர் சேகர் பாபு பேட்டி

திருக்கோவில் நிலங்களுக்கு தற்போது பட்டா வழங்கும் பேச்சுக்கே இடமில்லை - திருச்சியில் அமைச்சர் சேகர் பாபு பேட்டி

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினந்தோறும் 5000 பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் வரும் 16 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. அதனையொட்டி சமயபுரம் கோவிலில் உள்ள அன்னதான மண்டபத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதனை தொடர்ந்து திருவானைக்கோவில் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோவிலில் கோவில் யானைக்காக அமைக்கப்பட்டுள்ள யானை குளியல் தொட்டியையும், யானை அதில் குளிப்பதையும் அமைச்சர்கள் பார்வையிட்டனர். பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு...

ஐந்தாண்டுகள் கோவில்களில் யானை பாகன்களாக பணியாற்றும் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆட்சியில் 110 விதியின் கீழ் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அதை செயல்படுத்தவில்லை. தற்போது விவரங்கள் திரட்டி விரைவில் அனைவருக்கும் பணி நிரந்தர ஆணை வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் 180 ஏக்கர் அளவிற்கு ஆக்கிரமிக்கப்பட்ட திருக்கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டது குறித்து யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். யார் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இறைவன் சொத்து இறைவனுக்கே என்கிற அடிப்படையில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறும்.

கோவில்களில் உள்ள அறங்காவலர் குழுவில் ஏதேனும் பிரச்சனை என்றால் அதற்கு தக்கார் நியமிக்கப்பட்டு அந்த பிரச்சனைகளை சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அறங்காவலர் குழு அமைப்பதற்கான சட்ட விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மூன்றாண்டுகள் இருந்த குழுவின் கால அளவு தற்போது 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைவருக்கும் குழுவில் உறுப்பினராக வாய்ப்பு கிடைக்கும்.

திருக்கோவில் நிலங்கள் மன்னர்கள், ஜமீன்தார்கள் இனாமாக கொடுத்தது. அந்த நிலங்களுக்கு பட்டா கொடுக்க இயலாது. மயிலாடுதுறையில் அவ்வாறாக பட்டா கொடுத்தது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே தற்போது பட்டா வழங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றார். இந்த ஆய்வின் போது ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, கதிரவன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn