திருச்சி திமுகவில் திகு திகு... கலக்கத்தில் திருநாவுக்கரசர்!!
நவரத்தினங்களாக மின்ன வேண்டியவங்க இப்படி நவகிரகங்களா ஆளுக்கு ஒரு திசையில் உட்கார்ந்தா எப்படி தலைவரே... ஓஹோ உனக்கும் விஷயம் காதுக்கு வந்துடுச்சா, உங்க சிஷ்யன் இல்லையா தலைவா நீங்க இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க தலைவரே. சொல்லிட்டா போச்சு திருச்சி மாவட்டத்தில் மொத்தம் ஒன்பது சட்டமன்ற தொகுதிகள் இருக்கு மஹா அதுல ஒன்பதுலேயும் ஆளும் திமுக எம்.எல்.ஏக்கள் தான் உறுப்பினராக இருக்காங்க, இதுல கிட்டத்தட்ட மலைக்கோட்டை மாமன்னன் மீசை அமைச்சரும் அடங்கும்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்டச்செயலாளர வலம் வந்தார் பின்னாடி தலைமை அன்பில் மகேஷை வளர்த்துவிட வேண்டும் என்பதால் இவரை மாநில அளவில் பொறுப்பை கொடுத்து அனுப்பிட்டு மாவட்டத்தை மூன்றாக பிரிச்சு வடக்கு, தெற்கு, மாநகர் என கூறுபோட்டுட்டாங்க. அதெப்படி தலைவரே ஒரு மாவட்டத்துல ஒரு ஒருத்தரு ராஜாவா வலம் வந்தார். இந்த நிலையில இப்படி பிரிப்பாங்க, எல்லாம் மீசை அமைச்சரோட ஐடியா தான், ஏன் அப்படி செஞ்சாராம் ? எல்லாம் ஒரு கணக்குதான் என்ன தான் தலைநகர் அளவுல பாலிடிக்ஸ் பண்ணினாலும் ம்ம்ம் என்ன ம்ம்ம்ம் டெல்லிக்கு ராஜாவானாலும், தன்னோட ஊர்ல சர்வபலத்தோட இருக்கணும் இல்ல அதான் தனக்கு கைக்கு அடக்கமா இருக்குறவங்களுக்கு போஸ்டிங் போட்டுட்டாரு, தலைமையை பகைச்சுக்க கூடாதுனு மகேஷ்கு தெற்கு மாவட்டச் செயலாளராகவும், தனக்கு வேண்டியவரான வைரமணியை வடக்கு மாவட்ட செயலாளராகவும், மாநகருக்கு மேயர் அன்பழகனையும் நியமிச்சுட்டாரு ஓ இவரே இப்படி பிரிச்சுட்டாரா தலைவரே ?
அது எப்படி மஹா தலைமையோட அனுமதியோடதான், ஆனா பாரு போஸ்டிங் போட்டதுல இரண்டு எம்.எல்.ஏக்களுக்கு வருத்தம் ஒருத்தரு தொடர்ந்து நாலாம் முறையாக லால்குடி எம்.எல்.ஏ வா இருக்குற செளந்திரபாண்டியன் நாலுமுறை எம்.எல்.ஏவா தொடர்ந்து ஜெயிச்சுகிட்டு இருக்குற என்னைய விட்டுட்டு எப்படி வைரமணிய போடலாம் நான் என்னோட எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா பண்ணிடுறேன்னு ஆறு மாசம் முன்னாடியே ஆடித்தீர்த்துட்டாரு சரி இப்ப என்ன பிரச்சனையாம் சரியா கேட்ட மஹா, லால்குடி எம்.எல்.ஏ., தொகுதிக்குப்பட்ட புள்ளம்பாடி மற்றும் கானக்கிளியநல்லுார் பகுதிகள்ல, புதிய கட்டடங்கள் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
இதில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாவட்ட திட்ட இயக்குனர் தேவநாதன் உட்பட பலர் பங்கெடுத்துகிட்டாங்க. ஆனா, இந்த விழாவில், தி.மு.க.,வைச் சேர்ந்த லால்குடி தொகுதி எம்.எல்.ஏ.,வான சவுந்திரபாண்டியன் பங்கேற்காம புறக்கணிச்சுட்டாரு. ஒரு காலத்தில் அமைச்சர் நேருவின் தீவிர ஆதரவாளரான சவுந்திரபாண்டியன், நேரு பங்கேற்ற அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்காததால், தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைச்சிருக்காங்க. காரணம் என்னவாம் தலைவரே. தி.மு.க., மத்திய மாவட்ட செயலாளராக உள்ள வைரமணி, கட்சி கூட்டங்களுக்கும், முக்கிய நிகழச்சிகளுக்கும் எம்.எல்.ஏ.,வுக்கு தகவல் சொல்வதில்லை. அதை பொருட்படுத்தாமல், எம்.எல்.ஏ., வந்தாலும் உரிய மரியாதை கொடுப்பதில்லை.
இதனால், விரக்தி அடைந்த சவுந்திரபாண்டியன், அமைச்சர் நேருவிடம் தன்னோட ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். நேருவோ, அதைப்பற்றி வைரமணியிடம் ஏதும் கேட்காமல், எம்.எல்.ஏ.,வை குற்றம் சுமத்துவது போல், வைரமணிக்கு ஆதரவா பேசி வருகிறார்னு சொல்றாங்க, வெறுத்துப் போன எம்.எல்.ஏ., சவுந்திரபாண்டியன், தன்னிடம் இருந்த கட்சிப் பதவிகளையும் வேண்டாம் என்று கூறி விட்டு எதிலும் பங்கேற்காமல் ஒதுங்கியே இருப்பதோடு, தனக்கென்று தனி அலுவலகம் அமைத்து, தொகுதி மக்களுக்கு முடிந்தவரை நல்லதை செய்து வருகிறார். நல்லது செய்யலைனா நாலுமுறையா தொடர்ந்து ஜெயிக்க முடியுமா தலைவரே.
சரி இதெல்லாம் ஒருபக்கம் இருக்க திமுகவோட ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ ஒரு பக்கம் அமைச்சரைப்பத்தி கண்ணாபின்னானு பேட்டி கொடுக்க சர்ச்சையாச்சே அதுக்கு என்ன காரணமாம் தலைவரே. மஹா நீ குவாரி மேட்டர்ல பசுமை தீர்ப்பாயம் எடுத்த நடவடிக்கைனு நினைக்கிற அதுதான் இல்லையாம், பெரும்பாலும் முத்தரையவர்கள் வசிக்கும் பகுதியில அவரை மாவட்டச்செயலாளரா போடலனு அவருக்கு கடுப்பு அதனாலதான் இப்படி கண்ணாபின்னானு பேட்டி எல்லாம் கொடுத்துகிட்டு அலையறாராம்
ஆக ஆக நாலு எம்.எம்.ஏ பத்தி சொல்லிட்டிங்க மீதி இருக்குற ஐந்து எம்.எல்.ஏக்கள் அதுல ஒருத்தரு கூட்டணி கட்சியான மணப்பாறை தொகுதிக்காரரு அவருக்கு அதபத்தி என்ன கவலை இன்னொருத்தரு கிழக்கே சூரியன் உதிச்சா என்ன மேற்கே மறைச்சா என்னனு இனிக்க இனிக்க பேசி சீட்டு வாங்கி எம்.எல்.ஏ ஆகிடாரு இனி கோனு சொல்ல இன்னும் மூணு வருஷம் ஆகும் அதுவரை அவரை ஒண்ணும் பண்ண முடியாது, மீதம் இருக்குற மூணு எம்.எல்.ஏவும் மீசைக்கார அண்ணாச்சியோட பாசக்கார பிள்ளைகள் ஆக ஆக மந்திரி எதப்பத்தியும் கவலை படலைனு சொன்னாலும்கூட வரப்போக இருக்குற நாடாளுமன்ற தேர்தல்ல இப்படி ஆளுக்கு ஒருபுறம் நவக்கிரகங்கள் போல இருந்தா சரியா வருமானு கட்சிக்காரங்க பொலம்புறாங்க இது ஒருபுறம் இருக்க சிட்டிங் எம்.பி என்னடா நாம அரசர் போல வலம் வந்துகிட்டு இருக்கோம் நம்மள கவுத்து விட்டுடுவாங்களோனு அவரோட ஆதரவாளர்கள்கிட்ட இப்பவே புலம்ப ஆரம்பிச்சுட்டாராம் மஹா
தலைவரே இன்னொரு விஷயமும் கேள்விப்பட்டேன் மீசை அமைச்சரோட பையனுக்கு பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி கன்ஃபார்ம்னு பேசிக்கிறாங்க மஹா. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் பத்து மாசம் இருக்கு அதுக்கப்புறம் தெரியும் சுகப்பிரசவமா அல்லது குறைப்பிறசவமானு என்னமோ போ மஹா சரி முதல்வர் கோட்டையில கொடி ஏத்தப்போறாரு நான் போய் டிவில பார்த்துட்டு வந்துடுறேன். அதுக்குள்ள ஏதாவது காலை டிபனுக்கு ரெடி பண்ணிவை.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision