பச்சைமலை பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் நேரில் சென்று பார்வையிட்டு திடீர் ஆய்வு

பச்சைமலை பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் நேரில் சென்று பார்வையிட்டு திடீர் ஆய்வு

தமிழ்நாடு அரசு, வனத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக 
மரக்கன்றுகள் வழங்கும் தமிழ்நாடு பசுமையாக்கல் திட்டத்தின் மூலம் 
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட இலக்காகிய 3.1 இலட்சம் 
மரக்கன்றுகள் உற்பத்தியின் ஒரு பகுதியாக் துறையூர் வனச்சரகம் சோபனபுரத்தில் 60 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் நாற்றங்கால் வளர்ப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து திட்ட செயலாக்கம் குறித்து, வனத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து பச்சைமலைப் பகுதியில் சோபனாபுரம் முதல் டாப்செங்காட்டுப்பட்டி வரையிலான வனச்சாலையினை சீரமைத்தல் தொடர்பாக ஆய்வு செய்து, சாலை அமைத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் பச்சைமலை தண்ணீர்பள்ளம் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடையில், மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் 
பொருட்களின் தரம் மற்றும் பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து செங்காட்டுப்பட்டியில் உள்ள அரசு பழங்குடியினர் நல மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு சமைக்கப்படும் உணவின் தரத்தைப் பரிசோதித்தும், மாணவர்களிடம் கலந்துரையாடி குறைகளைக் கேட்டறிந்தும் 
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.

பின்னர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், கட்டப்பட்டு வரும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம், நீதிக்கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் 
மணிமண்டபம், ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் மணிமண்டபம் ஆகியவற்றினை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இந்நிகழ்வுகளில் மாவட்ட வன அலுவலர் ஜி.கிரன், உதவி வன பாதுகாப்பு அலுவலர் எஸ்.சம்பத்குமார், முசிறி வருவாய் கோட்டாட்சியர் த.மாதவன், செய்தி மக்கள் தொடர்புத்துறை உதவி இயக்குநர் த.செந்தில்குமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சாந்தி மற்றும் வனத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO