தன்னுடைய 14 வீடுகளுக்கும் வாடகை வேண்டாம்!! வீட்டு உரிமையாளராக வியக்க வைக்கும் திருச்சி அண்ணாச்சி!!!

தன்னுடைய 14 வீடுகளுக்கும் வாடகை வேண்டாம்!! வீட்டு உரிமையாளராக வியக்க வைக்கும் திருச்சி அண்ணாச்சி!!!

துருதுருவென சுறுசுறுப்பாக பணியாற்றும் மளிகை கடைக்காரர் இவர்.. ஊரடங்கு உத்தரவால் சிரமப்பட்ட தன் 14 வீடுகளில் குடியிருக்கும் மக்களிடம் வாடகை வசூலிக்காத மனிதநேய உள்ளத்திற்கு சொந்தக்காரர்!கொரோனா ஊரடங்கு உத்தரவால் பல்வேறு தொழில்கள் முடங்கிபோயின. இதனால் தினக் கூலிகள், நடுத்தரக் குடும்பத்தினர் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தனர்.

மூன்று வேளை உணவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த மக்கள் அதிகம். 40 நாள் ஊரடங்கினால் உணவிற்கே வழியின்றி தவித்தவர்கள் வாடகை வீட்டில் வசிப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை! வீட்டு வாடகை, மின்கட்டணம், இஎம்ஐ என எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று திணறிக் கொண்டிருந்த குடும்பங்களுக்கு ஆதரவு தரும் வகையில் அமைந்திருந்தது அவர்கள் குடியிருந்த வீட்டு உரிமையாளரின் செயல். அந்த உரிமையாளர் பற்றிய சிறப்பு தொகுப்பை திருச்சி விஷன் வெளியிடுகிறது!!

திருச்சி துவாக்குடிமலை, அண்ணா வளைவு பகுதியில் மளிகை கடை வைத்திருப்பவர் முருகன். மளிகை கடையில் கிடைத்த வருமானத்தை வைத்து சிறுக,சிறுக சேமித்து கடன் பெற்று அதே பகுதியில் கட்டிய வீடுகளை வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானம் மூலம் கடன் தொகையை செலுத்தி வந்துள்ளார்.இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், தன் வீடுகளில் வாடகைக்கு இருப்பவர்கள் படும் சிரமத்தை குறைக்கும் வகையில், தன்னுடைய 14 வீடுகளில் குடியிருக்கும் மக்களிடம் ஒரு மாத வாடகையை (தலா 3,000) தள்ளுபடி செய்துள்ளார் முருகன்.

தன்னுடைய வீடுகளில் குடியிருப்பவர்கள் வேலைக்கு செல்லாத நிலையில் இருப்பதால், அவர்களுக்கு மேலும் கஷ்டம் தரக்கூடாது என்பதற்காக வாடகை வசூலிக்கவில்லை என்று தெரிவிக்கும் முருகன், ஊரடங்கு காலத்தில் வருமானத்தை கருத்தில் கொள்வதைவிட, தன் வீட்டில் குடியிருப்பவர்களின் நிலைமையை எண்ணியதே வாடகையை தள்ளுபடி செய்வதற்கு காரணம் என்கிறார்.வீட்டு வாடகை மூலமே வங்கிகளில் பெற்ற கடன் தொகையை செலுத்தி வந்ததாகவும், தற்போது சேமிப்பில் இருக்கும் பணத்தை பயன்படுத்தி வங்கி கடன் செலுத்துவதாகவும் தெரிவிக்கின்றார்.

இது குறித்து அவருடைய வீடுகளில் குடியிருப்பவர்களிடம் கேட்கையில், ஒரு மாத வாடகை வேண்டாம் என்று சொன்னது இந்த ஊரடங்கு காலத்தில் மிகப்பெரும் விஷயம் என்றும், அவர் தள்ளுபடி செய்த வாடகையை பயன்படுத்தியே தங்களது குடும்ப தேவையைப் பூர்த்தி செய்வததாகவும் தெரிவிக்கிறார் அந்த வீட்டில் குடியிருக்கும் மருதை.

ஊரடங்கு காலத்திலும் மக்களின் நிலையை அறியாமல் அத்தியாவசியப் பொருட்களைக் கூட விலை உயர்த்தி விற்றுக் கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில், தன்னுடைய 14 வீடுகளில் குடியிருப்பவர்களின் வீட்டு வாடகையை தள்ளுபடி செய்ததோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு 10 கிலோ அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை கொடுத்து உதவியுள்ள முருகனின் குணம் பாராட்டுக்குரியது. பணங்களின் மதிப்பை காட்டிலும் உயர்ந்தது…மனித மனங்களின் மதிப்பு! என்பதை இந்த ஊரடங்கு காலத்திலும் உணர்த்தியிருக்கிறது வீட்டு உரிமையாளர் முருகனின் இத்தகைய செயல்!