திருச்சியில் ட்ரெண்டிங் ஆகி வரும் தென்னங்கீற்று தொப்பிகள்!! தொப்பிகளை செய்து அசத்தும் 63 வயது விவசாயி.

திருச்சியில் ட்ரெண்டிங் ஆகி வரும் தென்னங்கீற்று தொப்பிகள்!! தொப்பிகளை செய்து அசத்தும் 63 வயது விவசாயி.

அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் தொடங்கியுள்ள நிலையில், கோடை வெயிலின் தாக்கம் பல்வேறு மாவட்டங்களிலும் அதிகரித்தே காணப்படுகிறது.திருச்சியிலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடிப்பதுடன், மாவட்டம் முழுவதும் அனல் காற்று வீசி வருகிறது. கொரோனா அச்சத்தால் ஒருபக்கம் மக்கள் வெளிவராமல் இருக்கும் நிலையில், வெயிலின் தாக்கத்தினாலும் மதியத்திற்கு மேல் திருச்சியில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே உள்ளது.வெயிலின் தாக்கத்தினால் மக்கள் குடையின்றி வெளிவர முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது,

விஜயகுமார் (63).

இந்நிலையில் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையிலும், இயற்கை மாறாமலும் தென்னங்கீற்றினால் பிண்ணப்பட்ட தொப்பிகள் திருச்சி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

திருச்சி உறையூரை சேர்ந்தவர் விஜயகுமார் (63). விவசாயியான இவர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் இயற்கை கைவினைப் பொருட்களைச் செய்வதில் ஆர்வம் செலுத்துவார்.தற்போது தென்னங்கீற்றில் தொப்பிகளை செய்துவருகிறார். தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் ஓலைகளை சேகரித்து அதிலிருந்து தொப்பி செய்யும் விஜயகுமார், ஒரு தென்னங்கீற்றில் இருந்து நான்கு தொப்பிகள் வரை செய்ய முடியும் என்கிறார்.

Advertisement

வேலைப்பாடுகள் சற்று கூடுதலாக இருந்தாலும் மிகப் பொறுமையாகவும், நேர்த்தியாகவும் தென்னங்கீற்று தொப்பிகளை செய்கிறார் விஜயகுமார். இந்த தொப்பிகள் பார்ப்பதற்கு கண்ணைக் கவர்ந்திழுக்கும் ஒன்றாகவும், இயற்கை புத்துணர்வையும் தரும் வகையிலும் உள்ளது. ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து தொப்பிகள் வரை தன்னுடைய ஓய்வு நேரத்தில் செய்வதாக தெரிவிக்கும் விஜயகுமார், கொரோனா ஊரடங்கு காலத்தை இதற்காக அதிக அளவில் செலவிடுவதாகவும், மக்களும் இதனை விரும்பி வாங்கிச் செல்வதாகவும் தெரிவிக்கின்றார்.

இந்த தென்னங்கீற்று தொப்பிகளை 50 ரூபாய், 100 ரூபாய் என மக்கள் விரும்பி பணம் கொடுத்து வாங்கி செல்கின்றனர். கண் முன்னே தென்னங்கீற்றுகளை வெட்டி, அதனை தொப்பியாக செய்வதை பார்த்து மக்கள் வியக்கின்றனர்.ஒருபக்கம் தற்போது திருச்சியில் நிலவிவரும் வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்கு இந்த தென்னங்கீற்று தொப்பியை மக்கள் பயன்படுத்தினாலும், இது அணிந்து கொள்வதற்கு அழகாக, ஸ்டைலாக இருப்பதாலும் இதனை அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.

தென்னங்கீற்றுகளை கூரை வேய்வது, விசேஷ வீடுகளில் அழகு தோரணங்கள் கட்டுவது உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தி பார்த்திருப்போம். ஆனால் அதிலிருந்து மாறுபடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தென்னங்கீற்று தொப்பிகள் காண்போரை வியப்படையச் செய்கின்றது.

கத்திரி வெயிலுக்கு இதம் தரும் வகையிலும்,பார்ப்பதற்கு வித்தியாசமாகவும், அழகாகவும் இருக்கும் இந்த தென்னங்கீற்று தொப்பிகள் திருச்சி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.