தாய்மொழி தினம்! தமிழ்மொழியை போற்றும் திருச்சி தமிழ்தாசன்!! யார் இவர்?

தாய்மொழி தினம்! தமிழ்மொழியை போற்றும் திருச்சி தமிழ்தாசன்!! யார் இவர்?

இன்றைய நாகரீக காலத்தில் பிற மொழிகளை பேசினால் குருவாக பார்க்கிறோம். ஆனால் நம்முடைய தாய்மொழி தமிழைப் பேசினால் மட்டும் குறுகுறுவென்று பார்க்கிறோம். உலகிலுள்ள மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியாகவும் உலகில் தோன்றிய முதல் மனிதன் பேசிய மொழி என்றும் பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ளது நம் தமிழ்மொழி.
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்”
என்றான் முண்டாசுக்கவி பாரதி.

நாகரீக வளர்ச்சியினால் தாய்மொழியின் தனிப்பற்றை பறைசாற்றுவதற்கு சமீப காலத்தில் யாரும் இல்லை என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தோம்.ஆனால் தமிழுக்காகவே தன்னுடைய தொண்டுகளையும் சரளமாக பிற மொழி கலப்பின்றி பேச்சு வழக்கிலும் தமிழ் மொழியைக் கையாளும் இளைஞர் இவர்!

Advertisement

இதுவரையில் தன்னுடைய பேச்சால் சுமார் 500க்கும் மேற்பட்ட மேடைகளில் களம் கண்டவர். பட்டிமன்ற பேச்சாளர், நடுவர், இலக்கியச் சொற்பொழிவாளர், தன்னம்பிக்கை பேச்சாளர் என பேச்சுகளில் பல பரிமாணங்களை கையாண்டு வருபவர்.

தமிழ்தாசன் பூ.இரவிக்குமார்.

திருச்சி மாவட்டம் துறையர் அருகே அமைந்துள்ள கோட்டாறு கிராமத்தை சேர்ந்தவர் பூ.இரவிக்குமார்.பெற்றோர் பூபாலன் பொன்னம்மாள் ஆவார்.தாய்மொழி தமிழை பிறமொழிகள் கலப்படமின்றி தூய தமிழில் பேசுவதால் சிலர் ஏளனம் செய்து வந்தாலும் பலரும் இதையே விரும்புகின்றன என்பதே நிதர்சனம்.

இதுகுறித்து இரவிக்குமார் அவர்கள் கூறுகையில்”எனது பெற்றோர்கள் இருவரும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர்கள். யுத்த கலவரத்தால் நாங்கள் தமிழகத்திற்கு வந்தோம். எனது தாத்தா இலங்கையில் தமிழ் ஆசானாகவும் சிலம்பு ஆசிரியராக இருந்தவர். அதனால்தான் எனக்குள்ளும் தமிழ் இன்றளவும் வாழ்ந்து வருவதாக எண்ணுகிறேன்.வறுமையின் விளிம்பில் கூலி வேலை செய்து என்னுடைய பெற்றோர்கள் அரசு நிறுவனங்களில் படிக்கவைத்தார்கள். முதல் முதலாக எனக்குள் இருந்த தமிழ் ஆர்வத்தை வெளிக்காட்டியவர் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் பாண்டியன். அவருடைய தூய தமிழ்ப்பற்று பிறமொழி கலவாத தமிழ் என அதே ஆர்வம் எனக்குள்ளும் வந்தது.முதன் முறையாக பள்ளி ஆண்டுவிழாவில் கனத்த குரலோடு பேச ஆரம்பித்த பொழுது அரங்கத்தில் உள்ளவர்கள் வியப்பில் ஆழ்ந்தது அல்லாமல் நானும் சற்று வியப்பில் ஆழ்ந்தேன்.என்னாலும் பேச முடியும் என்ற நம்பிக்கையும் தமிழ்தாசன் என்ற பட்டத்தையும் பெற்றேன்.

அதன்பிறகு கல்லூரிகளில் தமிழ் படிக்க ஆசைப்பட்டேன்.ஆனால் சிலர் தமிழ் படித்தால் வேலை கிடைக்காது என்று தடைபோட நினைத்தனர். ஆனால் என்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் இளங்கலை தமிழ் படித்தேன். கல்லூரியில் சேர்ந்த பிறகு மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் 2000 நபர்கள் அமர்ந்திருந்த அந்த மேடையில் சற்று தயக்கத்துடனே இருந்தாலும் இறுதியில் முதல் பரிசினையும் அரங்கம் அதிர கைத்தட்டையும் பெற்றேன். அதிலிருந்து சமூகம் தன்னுடைய பேச்சையும் அங்கீகரிப்பதையும் எதிர்பார்ப்பதையும் உணர்ந்தேன். அதிலிருந்து என்னை தெளிவுபடுத்திக் கொள்ள புத்தகப்புழுவாக மாறினேன். பல சான்றோர்களின் பேச்சை கேட்டேன்.

மேடைகளில் மட்டும் தமிழ் வாழ்க என்று முழங்கிவிட்டு வெளியே வந்து கபடநாடகம் புரியாமல் என்னுடைய பேச்சு எழுத்து என அனைத்தையும் தூய தமிழில் மாற்றிக்கொண்டேன். இன்றளவும் அந்த தமிழிலேயே பயணிக்கிறேன். எனக்குப் பின்னும் தமிழ் மொழியை காக்க என் பேச்சை ஆயுதமாகவும், பல மாணவர்களை உருவாக்க தமிழாசிரியராகவும் பணிபுரிந்து வருகிறேன்” என்றார்.

“தமிழுக்கும் அமுதென்று பேர்- அந்தத்
தமிழ் இன்பத் தமிழெங்கள் உயிருக்குநேர்”