12 வருடங்களாக பாரம்பரிய முறையில் சோடா தயாரிக்கும் திருச்சி பெண் !!
திருச்சி கீழ சிந்தாமணி பகுதியில் கடந்த 12 வருடங்களுக்கு மேலாக பாரம்பரிய முறையில் கோலிசோடா தயாரித்து விற்பனை செய்து வருகிறார் ராஜலக்ஷ்மி. பெற்றோர் இறந்த நிலையில், கணவரின் ஆதரவும் இல்லாமல் 35 வருடங்களாக தன் குழந்தைகளுடன் வசித்து வரும் இவருக்கு கோலிசோடா தயாரிக்கும் எண்ணம் எப்படி வந்தது, என்று அவரிடமே கேட்டோம்.
என்னுடைய கணவரை நான் இழந்த போது என்னுடைய மகனுக்கு இரண்டு வயது, என் பெண்குழந்தை வயிற்றில் இருந்த என்னை ஆதரவின்றி விட்டுவிட்டு கணவர் சென்றுவிட வீட்டு வேலையை தவிர எதுவுமே அறிந்திடாத நான், என் குழந்தைகளையும் பார்த்துக்கொண்டு, தொடர்ந்து வீட்டு வேலைக்காக வெளிநாடுகளுக்கும் சென்று வேலை பார்த்து வந்தேன்.
சரியாக குழந்தைகளை பார்க்கவும் முடியாமல், வேலையும் செய்யமுடியாத நிலையில் ரொம்ப சிரமமான வாழ்க்கையில் 13 வருடங்களுக்கு முன்பு, உறவினர் ஒருத்தர் தான் இந்த சோடா தயாரிக்கும் தொழிலை எனக்கு அறிமுகப்படுத்தினார். 'அக்கா வேலைக்காக அங்கு இங்கு செல்ல வேண்டாம், இந்த தொழிலை நான் சொல்லி தரேன் நீங்க பண்ணுங்கன்னு' வழிகாட்டினார். ஆரம்பத்தில் கோலிசோடாவிற்கான கண்ணாடி பாட்டில் கிடைக்க ரொம்ப அலைந்தோம்.
தற்போது கூட பல மாநிலங்களில் இருந்து தான் பாட்டில் வாங்குகிறேன். உதவிக்கு இருக்கும் மகனின் கையில் அடிபட்டிருக்க தனியாளாக குடும்பத்தையும், கம்பெனியையும் சுமந்து வருகிறார். காலையில் ஐந்து மணிக்கு கிளம்பும் இவர், இரவு 10 மணி வரை, சோடா தயாரிப்பது, அதனை காவேரி பாலத்தில் கொண்டு சென்று விற்பனை செய்வது, அதன்பின் பாட்டில் கழுவுவது, என நேரம் பார்க்காமல் வேலை செய்து வருகிறார்.
ஆரம்பத்தில் கோலிசோடா மேல் மக்களுக்கு இருந்த ஆர்வம் தற்போது இல்லையென்றாலும், ஓரளவிற்கு வருமானம் எடுத்து வருகிறேன் என்கிறார். சோடா பாட்டில் சுற்றி கை வலி, நெடுநேரம் வேலை செய்வதால் உடலில் பிரச்சனைகள் என்று ஏற்பட்டாலும், என்னுடைய கடினமான காலத்தில் உடனிருந்த இந்த தொழிலை தொடர்ந்து செய்வேன் என நெகிழ்வுடன் கூறினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision