தனியார்மயமாகிறதா திருச்சி விமான நிலையம்? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

தனியார்மயமாகிறதா திருச்சி விமான நிலையம்? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையம், இந்தியாவில் உள்ள பழமையான விமான நிலையங்களில் ஒன்று. இந்த விமான நிலையமானது இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பன்னாட்டு விமான நிலையங்களில் முதலிடத்தில் உள்ளது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து அதிகப்படியான பன்னாட்டு விமான பயணிகளை கையாளும் திருச்சிராப்பள்ளி வானூர்தி நிலையமானது கடும் இட நெருக்கடி பிரச்சினையால் அதிகரித்து வரும் பயணிகளை கையாளுவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறது. பன்னாட்டு விமான நிலையம் என்ற போதிலும் தமிழகத்தின் மற்ற உள்நாட்டு விமான நிலையங்களை காட்டிலும் வசதிகள் குறைவே. உலகில் வேகமாக வளர்ந்து வரும் இந்திய விமான பயணிகள் எண்ணிக்கை மற்றும் இட நெருக்கடியை கருத்தில் கொண்டு, திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு புதிய முனையம் கட்ட இந்திய விமான நிலையங்களின் ஆணைய குழுமம் மூலம் அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

அதனை பரிசீலித்து ஒப்புதல் வழங்கியது அரசாங்கம். மேலும் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை திங்களில் ரூ.897 கோடியில் புதிய முனையம் (Airport Terminal) கட்டப்படும் என்று விமான நிலையங்களின் ஆணைய குழும பொது மேலாளர் அறிவித்தார். மாதிரி செயலாக்கம் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. இதற்கான பணிகளை இறுதி செய்து ஆலோசனை வழங்குவதற்காக பிரான்சு நாட்டை சேர்ந்த EGIS என்ற நிறுவனம் நியமிக்கப்பட்டு, பாஸ்கல் வாட்சன் (Pascall+Watson) என்ற இங்கிலாந்து நாட்டை சேர்ந்த குழுமத்தால் விமான நிலைய புதிய முனையம் வடிவம் பெற்று ஒப்புதலும் அளிக்கப்பட்டது. புதிய முனையம் கட்டிட டெண்டர் கோரப்பட்டது.

சரியாக ஒரு வருடம், இரண்டு மாதம் கழிந்து கடந்த 5ம் தேதி ITD Cementation India Ltd நிறுவனத்திற்கு முனையம் கட்டுவதற்கான நோக்கக் கடிதம் இந்திய விமான நிலையங்களின் ஆணைய குழுமத்தால் வழங்கப்பட்டது. ITD Cementation India Ltd நிறுவனத்தின் தாய் நிறுவனம் தாய்லாந்து நாட்டை மையமாக கொண்ட இத்தாலியன் தாய் டெவலப்மென்ட் (ITD) என்ற பொது துறை நிறுவனம் ஆகும். 2005ம் ஆண்டு முதல் இந்தியாவில் ITD Cementation நிறுவனம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் அகமதாபாத் மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களின் புதிய முனையங்களை வெற்றிகரமாக கட்டி முடித்து பயன்பாட்டில் உள்ள நிலையில், தற்போது திருச்சிராப்பள்ளி மற்றும் புனே லோகேகான் விமான நிலைய முனையங்களை கட்ட ஒப்பந்தம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறம் இருந்தாலும் திருச்சி விமான நிலையம் தனியார்மயமாக்குவது குறித்த செய்திகள் வந்து கொண்டு உள்ளன அது உண்மைத்தன்மை வாய்ந்ததா என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இது குறித்து திருச்சி உபைதுல்லாஹ் திருச்சி விஷன் செய்தியாளரிடம் பேசுகையில், "திருச்சி விமான நிலையம் தனியார்மயம் ஆனது என்பது முற்றிலும் பொய்! அரசு அதற்கான ஆய்வுகளை செய்து கொண்டு வந்துள்ளது.தற்போது தனியார்மயமானது என வரும் செய்திகள் நம்பத்தகுந்தது அல்ல. இனிவரும் காலங்களில் அதற்கான ஏற்பாடுகளை முன்வைக்கலாம்." என்றார்.

மேலும்,"விமான நிலையம் தனியார்மயமாவதால் பயணத் தொகை அதிகமாக வசூலிக்கப்படும். தற்போதுள்ள நடைமுறையே அதற்கு எவ்வளவோ மேலானது. இதனால் அரசுக்கு எந்த ஒரு வருவாயும் கிடையாது. எனவே தனியார்மயமாவதை விட இப்போது உள்ள நிலையியே பயணிகளுக்கு நன்மை தரும்." என்றும் கூறுகிறார்.