டவுன் சிண்ட்ரோம் ஒரு தொற்று நோயல்ல- திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் உலக டவுன் சிண்ட்ரோம் தின அனுசரிப்பு :
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ஆம் நாள் டவுன் சிண்ட்ரோம் ( Down Syndrome) தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திருச்சி மகாத்ம காந்தி அரசு மருத்துவமனை, சிறப்பு சிசு சிகிச்சைப் பிரிவின் சார்பில் மேம்படுத்தப்பட்ட பிறவிக் குறைபாடு கண்டறியும் படிவத்தினை இன்று (21.3.2022) மருத்துவமனையில் பிரசவ பிரிவில் வெளியிட்டு மருத்துவமனை முதல்வர் மருத்துவர் K. வனிதா பேசுகையில்,
திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் 1.1.2017 முதல் 31.12.2021 வரை கடந்த 5 ஆண்டுகளில் 38,920 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. மேலும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து மேல் சிகிச்சைக்காக 6,826 குழந்தைகள் பரிந்துரை செய்யப்பட்டு இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 45,746 குழந்தைகளுக்கு திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை சிறப்பு சிசு சிகிச்சை பிரிவில் பிறவிக் குறைபாடுகள் கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் பிறவி இருதய நோய்கள், உதடு மற்றும் அண்ணப்பிளவு , உதரவிதானத்தில் மேல் குடல் இறக்கம், தலையில் நீர் கோர்த்து பெரிதாக இருத்தல், ஆசனவாய் துவாரம் இல்லாமல் பிறத்தல், சுவாச குழாய் மற்றும் உணவுக் குழாய் இரண்டிற்கும் இடையில் பிணைப்பு ஏற்படுதல், இடுப்பு, கால் பகுதிகளில் பிறவிக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிறவிக் குறைபாடுகள் இதுவரை மொத்தம் 1165 குழந்தைகளுக்கு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஆரம்ப நிலையிலேயே பிறவிக் குறைபாடு கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டதால் அவர்களுக்கு நலமான வாழ்வு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பு பச்சிளம் குழந்தைநல மருத்துவர்கள் குழந்தை பிறந்தவுடன் தலை முதல் கால் வரை குறிப்பாக இதயம், கண் மற்றும் காது ஆகியவற்றில் ஏற்படும் பிறவி குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய பல்சாக்ஸி மீட்டர் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர். அவ்வாறு பிறவிக் குறைபாடு கண்டறியப்பட்டால் அவர்களுக்கு அதனை சரிசெய்வதற்கான அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சை முறைகள் முறையாக அனைத்து பிறவி குறைபாடு கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் மாவட்ட ஆரம்பநிலை இடையீட்டு மையம் மற்றும் பள்ளி சிறார் நடமாடும் குழுவினர் மூலமாக தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். இந்நிகழ்வில் மருத்துவமனை கண்காணிப்பாளர் E. அருண்ராஜ் முன்னிலை வகித்தார். மேம்படுத்தப்பட்ட பிறவிக் குறைபாடு கண்டறியும் படிவத்தினை குழந்தைநல துறை தலைவர் மருத்துவர். சிராஜ்தீன் நசீர் பெற்றுக்கொண்டார். சிறப்பு சிசு சிகிச்சைப் பிரிவு பொறுப்பு சார் மருத்துவர். K. செந்தில்குமார் பிறவி குறைபாடு கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொண்டார். குழந்தை நல மருத்துவர்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO