திருச்சி உட்பட 12 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு
திருச்சி, தஞ்சை, கடலூர் உள்பட 12 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
மேலும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் 1-ந்தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தினாலும் அவர்களிடம் கற்றல் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை போக்குவதற்கு நடப்பு கல்வியாண்டிற்கான பட்ஜெட்டில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை தீர்க்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, கொரோனா தொற்று பரவல் காரணமாக 1 முதல் 8ஆம் வகுப்புகள் வரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடையே கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை குறைப்பதற்காக தினமும் 1 மணி முதல் 1 மணி 30 நிமிடம் வரையில் தன்னார்வலர்களைக் கொண்டு குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் “இல்லம் தேடி கல்வி” என்கிற திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டம் குறித்து கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களிலும் விவாதிக்கப்பட்டது. இந்த திட்டம் செயல்படுத்தப்படும் முறை பற்றி முதல்வர் ஸ்டாலினுடன் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில், 1-8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் குறைபாடைப் போக்க, அவர்களின் இல்லங்களுக்கே சென்று பாடம் நடத்தும் “இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் துவக்கி வைத்தார்.
அந்த வாகனத்தில் “கற்பதை கற்கண்டாக்க இல்லம் தேடி கல்வி”, “இழந்த கல்வியை மீட்க இல்லம் தேடி கல்வி” போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மாணவர்களுக்கு பாடம் எடுக்க தன்னார்வலர்கள் இணையதளத்தில் அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு 12ஆம் வகுப்பு வரை படித்தவர்களும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்த தன்னார்வலர்களும் தற்போது தொடங்கப்பட்டுள்ள இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
முதற்கட்டமாக கடலூர்,திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, தஞ்சை, திருச்சி, விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களில் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தை நவம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஏதேனும் ஒரு மாவட்டத்தில் தொடங்கி வைப்பார்.
இந்த திட்டமானது 6 மாதம் வரை செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.