திருச்சியில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் வீட்டில் வெடிகுண்டுகள் பறிமுதல் - மகன் கைது

திருச்சியில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் வீட்டில் வெடிகுண்டுகள் பறிமுதல் - மகன் கைது

திருச்சி அரியமங்கலம் திடீர்நகர் அண்ணா நகர் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் கேபிள் சேகர். இவருடைய மனைவி கயல்விழி முன்னாள் அதிமுக கவுன்சிலர். இவரது மகன் முத்துக்குமார் ( வயது 29). இவரது வீட்டில் வெடிகுண்டுகள் தயாரிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து திருச்சி தெற்கு துணை ஆணையர் ஸ்ரீதேவி, பொன்மலை உதவியாளர் காமராஜ், வெடிகுண்டு தடுப்பு பிரிவு ஆய்வாளர் எட்வர்டு, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி, காவலர் ஜாகிர் உசேன், தடய அறிவியல் துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் இவரது வீட்டையும், குமரன் தெருவில் உள்ள பன்றி பண்ணை வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது 3 கிலோ எடை கொண்ட ( ஆணி மற்றும் பால்ஸ் உள்ள வெடிகுண்டு ) இரண்டு பால்ரஸ் வெடிகுண்டுகளை கைப்பற்றினர். அதனுடன் பட்டாசு வெடிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனைக்கு பின்னர் வெடிகுண்டுகள் குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக அரியமங்கலம் போலீஸார் வழக்குப்பதிந்து முத்துக்குமாரை கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக கீழ அம்பிகாபுரம் காவிரி நகரை சேர்ந்த  சரவணன், குட்ட பாலு, கணேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து அவர்களை தேடி வருகின்றனர். அதிமுக முன்னாள் கவுன்சிலர் வீட்டில் வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஏற்கனவே முத்துக்குமாரின் வீட்டில் வெடிகுண்டு வெடித்தது குறிப்பிடத்தக்கது.

இங்குள்ள பன்றி பண்ணையில் முத்துக்குமார் தலைமையில் பல்வேறு அசம்பாவிதங்களும், குற்றச் சம்பவங்களும் அரங்கேரி வருவதாகவும், குடியிருப்பு மத்தியில் இருக்கக்கூடிய பன்றி பண்ணையை அகற்ற வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO