தந்தை 117 முறை, மகன் 25 முறை, இரத்த தானம்!! நெகிழ வைக்கும் திருச்சி ஹீரோக்கள்!!!
நீரின்றி அமையாது உலகு” என்பதைப்போல ரத்தமின்றி செயல்படாது உடல். நம் உடலில் உள்ள ஒரே ஒரு திரவ உறுப்பு ரத்தம் மட்டுமே. ஆக்சிஜனை நம் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் எடுத்துச் செல்லும் மெட்ரோ ரயில் தான் ரத்தம். “ஆல் இன் ஆல்” ஆக செயல்பட்டு வருகிறது. இன்று உலக ரத்ததான தினம். தந்தை 117 முறையும், மகன் 25 முறையும் என இரத்த தானத்தின் ஹீரோக்கள் பற்றிய நெகிழ வைக்கும் தொகுப்புதான் இது!
திருச்சி சுந்தர் நகர் அருகில் ஐயப்பன் நகர் பகுதியில் வசிப்பவர் கோபால் (60). இவருடைய மகன் கிருஷ்ணா (25). இவர்கள்தான் இந்த ரத்ததான முகாமின் ரியல் ஹீரோக்கள்! 60 வயது ஆகியும் தன்னுடைய 22வது வயதில் இருந்து இன்றுவரையும் சுமார் 117 முறை ரத்தம் கொடுத்து பல உயிர்களை காப்பாற்றியவர். தன்னுடைய தந்தையினால் கவர்ந்து இழுக்கப்பட்டு தன்னுடைய 24 வயதிற்குள்ளேயே 25 முறை ரத்ததானம் வழங்கி இருக்கிறார் அவருடைய மகன் கிருஷ்ணா.
வாழ்ந்து என்ன செய்யப் போகிறோம் என வாழ்பவர்களுக்கு மத்தியில், சுமார் 150க்கும் மேற்பட்டோர் உடலில் ரத்தமாக ஓடிக்கொண்டிருக்கும் இவர்கள் உண்மையாகவே போற்றப்பட வேண்டிய நம்முடைய திருச்சியின் சொத்துக்கள். மறைந்த முன்னாள் தமிழக ஆளுநர் சுர்சித் சிங் பர்னாலா அவர்களிடமிருந்து தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் மோமொண்டோ போன்றவற்றை ரத்த தானத்திற்கு பெற்றிருக்கிறார்!
சமீபத்தில் அரசு மருத்துவமனையில் உள்ள கர்ப்பிணிகளுக்கு ரத்தம் தேவை என தேசிய கல்லூரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது. அங்குதான் கோபாலை சந்தித்தோம். 60 வயதிலும் ரத்தம் தேவை என்ற உடனே சற்றும் எதிர்பாராமல் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கியவர் கோபால்.
கோபால் அவர்களிடம் பேசினோம்… “இளைஞர்கள் ரத்தம் வேண்டும் என்ற உடனே தானாக முன்வந்து உதவ வேண்டும். ரத்தம் கொடுத்தால் நம் உடலுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயந்து கொண்டு சிலர் வராமல் இருக்கின்றனர்.உண்மையாக இரத்தம் கொடுத்தால் நம்முடைய உடலில் மீண்டும் மீண்டும் இரத்தம் உற்பத்தி ஆகிக்கொண்டே இருக்குமே தவிர நமக்கு எந்த தீங்கும் விளைவிக்காது“.என்றார்
மேலும் அவர் என்னுடைய 22 வயதில் சென்னையில் உள்ள கந்தாலையா நர்சிங் மருத்துவமனையில் ரத்தம் வேண்டும் என்று கேட்டார்கள் அங்கு கலந்துகொண்டு ரத்ததானம் செய்தேன். அன்றுமுதல் அப்போலோ, விஜய் ஹாஸ்பிடல் மற்றும் ரத்த தான முகாம்கள் என தொடர்ந்து ரத்தம் அளித்து வருகிறேன். விபத்து மற்றும் ரத்தம் வேண்டுமென்றால் இன்றளவும் பலர் என்னை தொடர்பு கொள்கிறார்கள். நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்கு செய்வதில் தான் உண்மையான மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது. எனவே என்னுடைய மகனையும் ரத்ததானம் செய்ய அறிவுரை கூறினேன். விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக ரத்தம் வெளியேறிவிடும் அதனை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது எனவே இளைஞர்கள் தானாக முன்வந்து ரத்ததானம் வழங்க வேண்டும்.என்றார்
அவருடைய மகன் கிருஷ்ணாவிடம் பேசியபோது… “என் தந்தையை பார்த்து தான் நானும் ரத்ததானம் கொடுக்க ஆரம்பித்தேன் அவர்தான் எல்லாமே” என்று முற்றுப்புள்ளி வைத்தார்.
பிறருக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்றால் கூட மனம் வராத இந்த மனிதர்களுக்கு மத்தியில் தன்னுடைய வாழ்நாளையே ரத்த தானம் கொடுத்து நெகிழ வைத்துள்ள நம்முடைய திருச்சி ஹீரோக்களுக்கு திருச்சி விஷன் சார்பாக வாழ்த்துக்கள்.