“நீ செத்துட்டேனு சான்றிதழ் கொடு”-லோன் தள்ளுபடி – விவசாயியை மிரட்டும் திருச்சி பைனான்ஸ் நிறுவனம்!!

“நீ செத்துட்டேனு சான்றிதழ் கொடு”-லோன் தள்ளுபடி – விவசாயியை மிரட்டும் திருச்சி பைனான்ஸ் நிறுவனம்!!

திருச்சி மாவட்டம் சிறுகாம்பூர் அருகே குருவம்பட்டியைச் சேர்ந்த விவசாயி முருகானந்தம்(34).இவர் திருச்சி தில்லைநகரில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் தனது டிராக்டர் ஆவணங்களை வைத்து 1,90,000 ரூபாய் கடந்த 2019ம் ஆண்டு கடன் வாங்கி இருந்தார். இதனை மூன்று தவணையாக 90 ஆயிரம் ரூபாயை பைனான்ஸ் நிறுவனத்தில் முருகானந்தம் செலுத்தியுள்ளார்.

கொரோனா ஆரம்பமானதால் கடந்த நான்கு மாதங்களாக வருவாய் இன்றி தவித்த நிலையில் மீதி 1 லட்சம் ரூபாயை செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார்.  விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் வாங்கிய கடன் தொகையை கட்ட வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது என்ற அறிவிப்பு வந்தும் சில நிதி நிறுவனங்கள் மிரட்டல் விடுத்து பணத் தொகையை வசூல் செய்து வருகின்றனர்.

Advertisement

தில்லை நகரில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனமானது கடந்த சில நாட்களாகவே முருகானந்தத்தை கடன் தொகையை கேட்டு பெரும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். 2 நாட்களுக்கு முன்பு அவருடைய தொலைபேசி பைனான்ஸ் நிறுவனத்தின் ஊழியரிடமிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“உன்னுடைய இறப்புச் சான்றிதழை கொடு லோனை முடித்துக் கொள்ளலாம். நீ செத்துட்டேனு சான்றிதழ் கொடு, நீ லோன் தொகை தான் கொடுக்கல” என்று ஊழியர் ஒருவர் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்.

இதுமட்டுமல்லாது நிதி நிறுவன ஊழியர்கள் காலை 6:00 மணிக்கு வீட்டில் வந்து அமர்ந்து விடுவதாகவும் இரவு 12 மணி வரை அங்கேயே இருந்து மிரட்டி வருவதாகவும், அக்கம்பக்கத்தில் ஊழியர்கள் தரக்குறைவாக பேசுவதாகவும்,வீட்டில் பெண்கள் எல்லாம் உள்ளனர் என்று வேதனை தெரிவிக்கிறார் முருகானந்தம்.

இந்நிலையில் உறவினர்களிடம் நண்பர்களிடம் பணம் கேட்டும் கிடைக்காததால் செய்வதறியாது தவித்த முருகானந்தம் வாத்தலை காவல்நிலையத்தில் பைனான்ஸ் நிறுவனம் மீது புகார் அளித்துள்ளார்.